

தமிழக காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், சிவகங்கை தொகுதி எம்.பி.,யாக உள்ளார். இவரது மனைவி டாக்டர் ஸ்ரீநிதி, கணவரின் தொகுதியான சிவகங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள, சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை வந்தார். ஸ்ரீநிதிக்கு, மகளிர் காங்கிரசார் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சிவகங்கை தொகுதியில் அடங்கிய புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், முனைசந்தையில், நேற்று முன்தினம் மகளிரை சந்தித்து பேசினார். பெங்குடியில் நுாறு நாட்கள் வேலையில் ஈடுபட்டுள்ள, பெண்களை சந்தித்தார். அதை தொடர்ந்து, அரிமளம் சுயஉதவிக் குழு மகளிரையும் சந்தித்து பேசினார்.

இரண்டாவது நாளாக, நேற்று மகளிர் காங்கிரசை சேர்ந்த செந்தாமரை மாமானர் மறைவுக்கு துக்கம் விசாரித்தார். முத்தனேந்தல், மானாமதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் செவிலியர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். அவரது அரசியல் சுற்றுப்பயணத்தில் சில சர்ச்சைகளும் ஏற்பட்டுள்ளன.
அதாவது, அரிமளம் ஒன்றியம், கடியாபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், டாக்டரின் இருக்கையில் ஸ்ரீநிதி அமர்ந்து, டாக்டர்களிடம் பேசிய புகைப்படம், சமூக வலைதளங்களில் விமர்சனத்தை கிளப்பியுள்ளது. ஏற்கனவே, மகளிர் காங்கிரசில், சுதா ராமகிருஷ்ணன், விஜயதரணி, ஹீசீனா சையது, ஜான்சிராணி என, ஏழெட்டு கோஷ்டிகள் உள்ளன. தற்போது, ஸ்ரீநிதி தலைமையில், புது கோஷ்டி உருவாகி இருக்கிறது.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2802197