
கடந்த சில நாள்களாக தீவிர சிகிச்சையிலிருந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாகக் கடந்த ஜூலை 18-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல்நலம் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதென்று தகவல்கள் வெளியான நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 80.

கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு உடல் நலக்குறைபாடு காரணமாக மதுசூதனன் சிகிச்சை பெற்றுவந்தார். சமீபத்தில் மூச்சுத்திணறல் பிரச்னையைக் காரணமாகச் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், கடந்த மாதம் அவரது உடல்நிலை குறித்துப் பல்வேறு செய்திகள் பரவின. அப்போது அதிமுக-வின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “கழக அவைத்தலைவர் மதுசூதனன் அவர்களின் உடல்நிலை தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம்” என அறிவிப்பு வெளியானது.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னர் அ.தி.மு.க ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று பிரிந்திருந்த காலத்தில், ஜெயலலிதாவின் அணியிலிருந்தவர் மதுசூதனன். இவர் கடந்த 1991-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். மதுசூதனன் 15 ஆண்டுகளுக்கும் மேல் அதிமுகவின் அவைத் தலைவர் பொறுப்பிலிருந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் தொடர் சிகிச்சையிலிருந்த மதுசூதனன் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். இவரின் மறைவுக்கு அதிமுக தலைவர்கர் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்தது வருகின்றனர்.