
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:
எஸ்.ராமகிருஷ்ணன், கோவையிலிருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: ‘இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு’ என்றார் திருவள்ளுவர். அதாவது, ‘வருவாய் வரும் வழிகளைத் தேடி, அதை திரட்டி, பாதுகாத்து, நாட்டின் நலனுக்கு செலவு செய்வது தான், நல்ல அரசு’ என்கிறார்.
தமிழக பட்ஜெட் அறிவிப்புக்கு முன், அமைச்சர் தியாகராஜன், நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். அதில், தமிழகத்தின் கடன் சுமை 5.75 லட்சம் கோடி ரூபாய் எனவும், தனிநபர் கடன் 1.10 லட்சம் ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வெள்ளை அறிக்கையின் நோக்கமே, தி.மு.க.,வின் வாக்குறுதிகளை செயல்படுத்த முடியாது என்பதை மக்களுக்கு தெரிவிப்பது தான்.

தமிழகத்தின் கடன் சுமை குறித்து நன்கு தெரிந்தும், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஏன் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள் கொடுத்தார்? ஆட்சியை பிடித்தால் மட்டும் போதும் என்ற எண்ணமா? அது சரி… தமிழக அரசின் கஜானா காலியாக இருக்கும் போது, கடன் கழுத்தை நெரிக்கும் போது, தி.மு.க., ஆட்சி அமைத்த 100 நாட்களிலேயே 4,000 கோடி ரூபாய் கூடுதல் கடன் பெற்றுள்ளதே… அந்த கொடுமையை என்னவென்று சொல்வது?
‘இலவசம்’ என்ற பெயரில் வழங்கப்படும் அத்தனையும், மக்களின் வரிப் பணத்திலிருந்து தானே வாங்கப்படுகிறது? அதை, ‘இலவசம்’ என சொல்வது எவ்வாறு பொருந்தும்? ஊழல் இல்லாத நேர்மையான அரசு; தரமான கல்வி, சுகாதாரம், மருத்துவம்; வேலைவாய்ப்பு போன்றவற்றை தான் தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர். அரசிடமிருந்து இலவசமாக கிடைக்கும் பொருட்களை அல்ல!
இலவசமாக கிடைக்கும், ‘டிவி, மிக்சி, கிரைண்டர்’ போன்றவை மக்களின் வறுமையை ஒழித்து விடாது. மாறாக, ஆளுங்கட்சியினர் கொள்ளை அடிப்பதற்கு தான் உதவும்.தமிழக அரசு, நஷ்டத்தில் இயங்கும் துறைகளை சீரமைக்க துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தி.மு.க., ஆட்சி ஆரம்பித்தவுடன், தமிழகத்தின் நிதி ஆதாரத்தை கண்டறிய, ஜெயரஞ்சன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அதன் செயல்பாடு என்ன என்பது இதுவரை தெரியவில்லை.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2830203