
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:
கலைப்பித்தன், கடலுாரிலிருந்து எழுதுகிறார்:
‘உள்ளாட்சி தேர்தலில் தோற்றால் கழுத்தறுப்பேன்…’ என சொல்கிறார், தமிழக அமைச்சர் ஒருவர். அவர் என்ன தொழில் செய்கிறார் என்ற சந்தேகம் நமக்கு வந்து விட்டது.மக்கள், இவரை எப்படி எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுத்தனர்? முதல்வர் ஸ்டாலின், அவருக்கு ஏன் அமைச்சர் பதவி கொடுத்தார்? ஒருவேளை அவர் மீதான பயம் காரணமாக இருக்குமோ…கலை நாடாக இருந்த தமிழகம், எப்போது கொலை நாடாக மாறிப் போனதே!
வாழ்வின் அனைத்திலும் வெற்றி, தோல்வி ஏற்படும். வெற்றி பெறும் போது குதிப்பதும், தோல்வியுறும் போது கொலைவெறியுடன் இருப்பதும் சரியல்ல.அரசியல்வாதிகளுக்கு அத்தகைய மனநிலை இருந்தால், நம் அரசியலின் தரம் தாழ்ந்து விட்டது என அர்த்தம்.கடந்த 1967ல் காமராஜர் சட்டசபை தேர்தலில் தோல்வியுற்றார். அப்போது அவரது தொண்டர்கள், ‘தலைவரே… இந்த மக்கள் உங்களை தோற்கடிச்சுட்டாங்களே… ஒண்ணுமே புரியலையே?’ என புலம்பினர்.அதற்கு காமராஜர், ‘இது தான் ஜனநாயகம். இதுக்கு தானே நாம் பாடுபட்டோம்’ என்றார்.

‘இல்லை தலைவரே… இந்த தி.மு.க.,காரங்க நம்ம வீட்டுக்கு எதிரிலேயே பட்டாசு வெடிக்கிறாங்க…’ என்றனர் தொண்டர்கள்.’ஏன் போன தேர்தல்ல நீங்க வெடிக்கலையா? இதிலிருந்து தெரியுதில்ல, நாம நல்லபடியா தேர்தல் நடத்தி இருக்கிறோமுன்னு… போயி அடுத்த வேலைய பாருங்க…’ என்றார் காமராஜர்.இவரல்லவோ அரசியல் தலைவர். இப்போது அப்படிப்பட்ட தலைவர்களை தமிழகத்தில் காண முடியவில்லை.’தோற்றால் கழுத்தறுப்பேன்’ என மிரட்டும் நபர்கள் தான் இன்றைய அரசியலில் உள்ளனர்.’கடமை, கண்ணியம், கட்டுபாடு’ என அண்ணாதுரை வளர்த்த தி.மு.க., இன்று அநாகரிகமாக மாறி விட்டது. ஆளுங்கட்சியினரை கண்டாலே பயமாக இருக்கிறது!
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2824165