
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
எஸ்.ராமசுப்பிரமணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்து, ஹிந்து விரோத போக்கை தீவிரமாக கடைப்பிடித்து வருகிறதோ என்ற எண்ணம் உருவாகியுள்ளது. சென்னை பல்கலையில், ஆடி வெள்ளிக்கிழமை அன்று, துணைவேந்தர் தன் அலுவலகத்தில் வழிபாடு செய்துள்ளார். இதை, சென்னை பல்கலையில் பொருளாதார துறை தலைவராக இருந்து ஓய்வு பெற்ற மு.நாகநாதன், ‘சென்னை பல்கலையா, சங்கர் பாபா கல்விக் கழகமா?’ என விமர்சித்துள்ளார்.இந்த விமர்சனத்தை சாதாரணமாக கடந்து செல்ல இயலவில்லை. ஏனெனில், மேற்படி நாகநாதன், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நெருக்கமாக இருந்தவர்.
மத்திய- – மாநில அரசு அலுவலகங்களில், ஒவ்வோர் ஆண்டும் ஆயுத பூஜையை வெகு விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். பணப்புழக்கம் உள்ள கருவூலகங்களில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பூஜை நடப்பதுண்டு. இதற்கு இது நாள் வரை, மாற்று மதத்தினர் கூட மறுப்பு தெரிவித்தது இல்லை.கிறிஸ்துமஸ் பண்டிகை, அரசு அலுவலகத்தில் கொண்டாடப்படுவது உண்டு. முஸ்லிம் சிலர், அலுவலகத்திலேயே தொழுகை நடத்துவதும் உண்டு. இவற்றை, சகோதர நேசத்துடன் தான் அனைவரும் ஏற்று கொண்டுள்ளோம். இதில் நாகநாதன் குறுக்கிட்டு, பிரச்னை துாண்டுவது ஏன்? சமீபத்தில், ஹிந்து அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு ஒரு புதிய திட்டத்தை கூறியுள்ளார்.

ஒன்பது ஆண்டுகளாக கோவில்களுக்கு செலுத்தப்பட்டுள்ள, 2,000 கிலோ தங்க நகைகள் உருக்கப்படாமல் உள்ளன. காணிக்கை நகைகளை, கோவில் பயன்பாட்டுக்கு போக, மீதியை உருக்கி தங்க பிஸ்கட்டுகளாக மாற்றி வைப்பு நிதியில் வைக்கப்படும். இதன் மூலம் ஆண்டுக்கு, 20 கோடி ரூபாய் வட்டி கிடைக்கும் என, அமைச்சர் கூறியுள்ளார். நமக்கு விபரம் தெரிந்த வரையில், வங்கியில் நகையை அடமானமாக பெற்று, வட்டிக்கு கடன் கொடுப்பர். தங்க நகையை, ‘டிபாசிட்’ ஆக பெற்று, அதற்கு வட்டி வழங்குவதாக தெரியவில்லை. மேலும், தமிழக கோவில்களில் இருக்கும் ஆபரணங்களின் மதிப்பு 10 ஆயிரம் கிலோவுக்கும் அதிமாக இருக்கும் என்றும், 2,000 கிலோ எனக் குறிப்பிடுவதில், ஏதும் சூழ்ச்சி இருக்கிறதோ என்ற சந்தேகமும் வருகிறது. இதற்கிடையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஹிந்து அறநிலைய துறை இயக்குனர் அலுவலகத்தில் உள்ள கல்வெட்டில், ‘ஹிந்து’ என்ற வார்த்தை மட்டும் நீக்கப்பட்டுள்ளது.
ஹிந்து விரோத கட்சியின் கைகளில் ஆட்சி சிக்கியுள்ளது. நடப்பதை பார்த்தால், மாநிலத்தில் உள்ள கோவில்கள் அனைத்தையும், ‘குளோஸ்’ செய்து விடுவரோ என்ற அச்சம் ஏற்படுகிறது. இன்னும் சில வாரங்களில் ஆயுத பூஜை வரவுள்ளது. இதை அரசு அலுவலகத்தில் கொண்டாட கூடாது என, தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பினாலும் ஆச்சரியமில்லை. வரும் 2022ம் ஆண்டு முதல் தமிழக அரசு அலுவலகங்களில் பொங்கல், தமிழ் ஆண்டு பிறப்பு, தீபாவளி போன்ற ஹிந்து பண்டிகைகளுக்கு விடுமுறை இருக்காது என்று கருதலாம். இரண்யன் ஆட்சியில், ‘இரண்யாய நமஹ’ என்று தானே சொல்லியாக வேண்டும். ‘ஓம் நமோ நாராயணா’ என சொல்ல முடியுமா என்ன?
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2815320