
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் : ஏ.மணி, சிங்காநல்லுார், கோவை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: இப்பகுதியில் வாசகர் ஒருவர், ‘முதல்வர் ஸ்டாலினுக்கு சுயபுத்தியை விட, சொல்புத்தி தான் உள்ளது. எதற்கெடுத்தாலும் குழு ஏற்படுத்தி, அதன் ஆலோசனையின்படி தான் ஆட்சி நடத்தி வருகிறார்’ எனக் குறிப்பிட்டுள்ளார். ஆட்சி பொறுப்பில் அமர்ந்த உடனே, ஒரு நாட்டை நிர்வகிக்கும் ஆற்றலும், திறமையும், துறைசார் ஞானமும் யாருக்கும் வரப்பெற்று விடுவதில்லை.

‘நானே அறிவாளி’ என தற்பெருமையும், அகந்தையும் கொண்டிருப்பதை விட, தன்னை காட்டிலும் அறிவுடையோரிடம் ஆலோசனை கேட்பது போற்ற தகுந்த அணுகுமுறை. நாம் ஈடுபட போகும் காரியத்திற்கு, அந்த துறை சார்ந்த அனுபவம் பெற்றவர்களின் துணை கிடைத்துவிட்டால் சாதித்து விடலாம். இதை 2,000 ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவர் பெருந்தகை, ‘தெரிந்த இனத்தொடு நேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு அருள் பொருள் யாதொன்றும் இல்’ எனும் குறள்மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.

சங்க காலத்திலும் மன்னர்கள், அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, ‘ஐம்பெருங்குழு, எண்பேராயம்’ போன்ற குழுக்களை அமைத்து நல்லாட்சி புரிந்தனர். முதல்வர் ஸ்டாலின், குழு அமைத்து அதன் வழிகாட்டுதலின்படி ஆட்சி புரிகிறார் என்பது வரவேற்கத்தக்கது; விவேகமானதும் கூட!
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2804426