
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:
ஆர்.சேஷாத்திரி, சென்னையிலிருந்து எழுதுகிறார்: ‘பழி ஓரிடம், பாவம் ஓரிடம்’ என்ற பழமொழி, பா.ஜ.,வுக்கு மிக பொருத்தம். தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள தி.மு.க., மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.,வை, எப்போதுமே பரம எதிரியாக நினைக்கிறது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அரசில், மாறன், டி.ஆர்.பாலு, ஆ.ராஜா ஆகியோர் அமைச்சராக இருந்ததை, தி.மு.க.,வினர் வசதியாக மறந்து விட்டனர்.
‘மிசா’ காலத்தில், பா.ஜ.,வுக்கும், தி.மு.க.,வுக்கும் நட்பு ஏற்பட்டது. இன்றைய தி.மு.க.,வினருக்கு, மிசா கால காங்கிரஸ் பற்றி தெரியாது. அன்றைக்கு தி.மு.க.,வினர் அடைந்த துன்பம் கொடியது. அதை யார் செய்தது என்பதை பற்றி எல்லாம், இன்றைய தி.மு.க., தலைமைக்கு கவலை இல்லை.
ஊழல்களை வெளிப்படுத்தி, தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதி ஆட்சியை கலைத்தது யார்? தி.மு.க., ஆட்சியில் நடந்த ஊழல் விவகாரங்களை, வானொலி மூலம் ஊரெங்கும் பரவ செய்தது யார்? அன்றைய காலத்தில் பிரபல எழுத்தாளர் ஒருவர், தினமும் மாலை 6:30 மணிக்கு வானொலியில் கருணாநிதி பற்றியும், அவரது ஊழல் பற்றியும் ஒரு குட்டிக் கதை சொல்வார்.

ஒரு நாள் இரவு 7:15 மணிக்கு டில்லி வானொலி செய்தியில், ‘கருணாநிதி குடும்பத்தை சேர்ந்த ஒருவர் ‘குடி’ போதையில் கைது செய்யப்பட்டார்’ என்ற செய்தியை, சரோஜ் நாராயணசாமி கம்பீரமாக வாசித்தார். அன்று முதல் இன்றைய காலக்கட்டம் வரை கருணாநிதி பெயரை கெடுத்தது, சர்க்காரியா கமிஷன் தான். கருணாநிதிக்கு, ‘ஊழல் விஞ்ஞானி’ என பட்டம் வாங்கிக் கொடுத்தது யார்? எல்லாம், காங்கிரசை சேர்ந்த முன்னாள் பிரதமர் இந்திரா தான்!
ஆனால் தி.மு.க.,வினர், அந்த காங்., உடன் கை கோர்த்து, பா.ஜ.,வை திட்டுகின்றனர். பா.ஜ.,வை பொறுத்தவரை, தி.மு.க.,வின் பெயரை கெடுக்க வேண்டும் என எப்போதும் நினைத்தது இல்லை. தி.மு.க.,வினருக்கு நண்பன் யார், துரோகி யார் என்றே தெரியவில்லையே!
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2832044