
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:
க.அருண்குமார், நெல்லையிலிருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்:
‘நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் வானத்தை வில்லாக வளைப்போம், மணலை கயிறாக திரிப்போம்’ என்ற ரீதியில் பலவிதமான வாக்குறுதிகளை அள்ளி வீசினர், தி.மு.க.,வினர்.இப்போது ஆட்சி கட்டிலில் அமர்ந்த பின், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்று உணர்ந்து பேய் முழி முழிக்கின்றனர், அதே தி.மு.க.,வினர்!
தமிழக அரசு மீது இருக்கும் 5.70 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையே, தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலாததற்கு காரணம் என, பிரச்னையை திசை திருப்பி ஒதுங்கி கொள்ள முயற்சிக்கிறது, தி.மு.க., அரசு.’எதை தின்றால் பித்தம் தீரும்’ என்பது போல, எந்தெந்த செலவினங்களின் மீது, ‘கை’ வைத்தால் கொஞ்சமாவது சேமிக்கலாம் என, தமிழக அரசு யோசிக்கிறது போலும்!வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரத்தை விரும்பாதோர், அதை அரசுக்கு விட்டுக் கொடுக்கும் வசதியை துவக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளதாம்.
இதை விட நல்ல யோசனை ஒன்று இருக்கிறது…தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.,க்கள் 159 பேர் உள்ளனர். அவர்கள் அத்தனை பேரும் கோடீஸ்வரர்கள் தானே தவிர, யாரும் அன்றாடங்காய்ச்சி கிடையாது.ஒரு எம்.எல்.ஏ.,வுக்கு ஊதியம் மற்றும் இதர படிகளாக, மாதம்தோறும் 2 லட்சம் ரூபாய் அரசு வழங்குகிறது.

159 பேருக்கும் மாதம்தோறும் 3.18 கோடி ரூபாய் வழங்குகிறது.அடுத்த ஐந்து ஆண்டுகளில், 200 கோடி ரூபாய் அவர்களுக்கு செலவு செய்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தில், அரசுஉள்ளது.மக்கள் சேவை செய்ய வந்திருக்கும், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.,க்கள், தங்கள் ஊதியம் மற்றும் இதர படிகளை விட்டுக் கொடுக்க முன் வந்தால் பாராட்டலாம். செய்வரா?
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2822976