
கொடிக்கம்பம் நடும் பணிக்கு சென்ற சிறுவன் பலியானது நெஞ்சை அதிர வைக்கிறது. கட்சி கொடிக்கம்பங்களும், பேனர்களும், அலங்கார வளைவுகளும் தொடர்ந்து உயிர்களை காவு வாங்குகின்றன. கீழான இந்த நிலையிலிருந்து அனைத்து கட்சிகளும் விடுபட வேண்டும்.
– ம.நீ.ம கட்சித் தலைவர் கமல்ஹாசன்
‘ஆனால், உங்கள் கட்சியின் சின்ன விழாவாக இருந்தாலும், ஏராளமான கொடிக்கம்பங்களும், ‘பேனர்’களும் கட்டப்படுகின்றனவே…’ என, நினைவுபடுத்தத் தோன்றும் வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர், நடிகர் கமல் ஹாசன் அறிக்கை
தி.மு.க.,வின், 100 நாள் ஆட்சி தோல்வி என, பா.ஜ., பிரமுகர் எச்.ராஜா கூறுகிறார். ஆனால், ஏழு ஆண்டுகளாக கேவலமான ஆட்சியை நடத்தி வருகிறார் மோடி. அவரது கையாள் எச்.ராஜா. அவரின் பேச்சை கேட்டு நாடே சிரிக்கும்.
– தமிழக மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன்
‘தி.மு.க., ஆட்சியை பற்றி சொன்னால், கம்யூனிஸ்டான உங்களுக்கு ஏன் இப்படி பற்றிக் கொண்டு வருகிறது…’ என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன் அறிக்கை
சென்னையில் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் அடுக்கு மாடி வளாகத்தை பார்வையிட்டேன். தண்ணீர் வசதி இல்லை; மின் துாக்கி இல்லை என பல குறைகளை மக்கள் கூறுகின்றனர்.
– விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்
‘மக்கள் கூறுகின்றனர் என்கிறீர்களே… உங்கள் கண்களுக்கு தென்படவில்லையா; கூட்டணி தர்மம் மறைக்கிறதா…’ என, கேட்கத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை

பெட்ரோல் எரிபொருள், காஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி, ஏழைகளின் வயிற்றில் அடித்து விட்டு, சுங்க கட்டணத்தையும் உயர்த்த எண்ணுவது, மக்களின் ரத்தம் குடிக்கும் செயல்.
– நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
‘இவ்வளவு எதிர்ப்பு கிளம்பிய பிறகு, சுங்க கட்டணங்களை மத்திய அரசு உயர்த்தாது என நம்புவோம்…’ என, கூறத் தோன்றும் வகையில், நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை
இன்று என் பிறந்தநாள். கொரோனா தொற்று இன்னும் குறையாத நிலையில், என்னை சந்திக்க யாரும் வர வேண்டாம். கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
– தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்
‘நீங்கள் சொல்லாவிட்டாலும், யாரும் வர மாட்டார்கள். அந்த அளவுக்குத் தான் கட்சி நிலைமை இருக்கிறது கேப்டன்…’ என, சொல்லத் தோன்றும் வகையில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அறிக்கை
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. பெருமனது வைத்து மத்திய அரசு, லிட்டருக்கு 20 பைசா குறைத்துள்ளது.
– தமிழக காங்., செய்தி தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ்
‘பெட்ரோலிய பொருட்கள் விலை, சர்வதேச ரீதியிலானது. அதில் ஏற்படும் மாற்றத்திற்கு, மத்திய, மாநில அரசுகள் பொறுப்பில்லை…’ என, கூறத் தோன்றும் வகையில், தமிழக காங்., செய்தி தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2830400