
பள்ளிகள், விடுதிகளின் பெயரில் இருக்கும், ‘ஆதிதிராவிடர்’ என்ற வார்த்தையை நீக்க வேண்டும் என, 2017ல் கோரிக்கை வைத்தேன். அதை மீண்டும் முன்வைக்கிறேன். தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்.
– விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி., ரவிகுமார்
‘உங்கள் கோரிக்கையை, அ.தி.மு.க., அரசு கிடப்பில் போட்டுவிட்டது போலும். தி.மு.க., அரசு கண்டிப்பாக நிறைவேற்றும். இது, கடந்த கால வரலாறு…’ என, சொல்லத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி., ரவிகுமார் அறிக்கை.
‘மக்களை தேடி மருத்துவம்’ என்ற பெயரில், புதிய திட்டத்தை, தி.மு.க., நேற்று அறிமுகம் செய்தது போல காட்டியுள்ளது. ஆனால், இந்த திட்டத்தை, 2018ல் முதல்வராக இருந்த இ.பி.எஸ்., துவக்கி விட்டார். இப்போது, ‘ஸ்டிக்கரை’ மட்டுமே தி.மு.க., ஒட்டியுள்ளது.
– அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் கோவை சத்யன்
‘நல்லவேளை சொன்னீர்கள். இல்லையேல், இது, தி.மு.க.,வின் உன்னத திட்டம் என்ற ரீதியில் பிரசாரம் செய்யப்பட்டிருக்கும்…’ என, சொல்லத் தோன்றும் வகையில், அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் கோவை சத்யன் அறிக்கை.
டில்லியில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோரை கட்டியணைத்து, காங்., – எம்.பி., ராகுல் ஆறுதல் கூறுவது போல படங்கள் வந்துள்ளன. வல்லுாறுகள் மக்களுக்கு சேவையாற்றாது; மக்களின் உணர்வுகளுடன் தான் விளையாடும்.
– தமிழக பா.ஜ., பொறுப்பாளர் ரவி

‘ஆட்சிக்கு வரத் துடிக்கும் ராகுல், இதுபோல செய்தால் தானே மக்கள் மனதில் இடம்பெற முடியும்…’ என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., பொறுப்பாளர் ரவி அறிக்கை.
தடுப்பூசி போட்டுக் கொள்வதில் தமிழகம் இன்னும் பின்னிலையில் தான் உள்ளது. மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில், 6 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டு உள்ளனர்.
– அரசியல் விமர்சகர் சுமந்த் ராமன்
‘இந்த, 6 சதவீதத் தடுப்பூசிக்கே, 6,000 அரசியல் நடந்து விட்டதே…’ என, கிண்டலாக கூறத் தோன்றும் வகையில், அரசியல் விமர்சகர் சுமந்த் ராமன் அறிக்கை.
கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கு, கருணாநிதி பெயரை சூட்ட இருப்பதாக தகவல் வருகிறது. தமிழகத்தின் பெருமையை உலகிற்கு பறைசாற்றிக் கொண்டிருக்கும் அடையாளங்களை அழித்து, கருணாநிதி பெயரைச் சூட்டுவதற்கான தமிழக அரசின் முயற்சி அதிர்ச்சியளிக்கிறது.
– புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி
‘கருணாநிதியின் பெயர், உலகம் முழுவதும் பரவ வேண்டாமா; அதன் மூலம், தமிழகத்தின் உயரிய தலைவர் என்ற புகழ் வர வேண்டாமா…’ என, கிண்டலாக கேட்கத் தோன்றும் வகையில், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அறிக்கை.
தவறான பொருளாதார கொள்கையாலும், பிழையான நிர்வாக முடிவாலும், நாட்டின் பொருளாதாரத்தை அதலபாதாளத்திற்குள் தள்ளிவிட்டு, பெட்ரோல் மற்றும் சமையல் காஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி நாட்டு மக்களை வாட்டி வதைப்பதா?
– நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
‘எதிர்க்கட்சியாக இருக்கும் போது, பொருளாதார மேதை போல பேசுகின்றனர்; ஆட்சிக்கு வந்ததும் தடுமாறுகின்றனர். நீங்களும் அந்த ரகம் போலத் தானா…’ என, கேட்கத் தோன்றும் வகையில், நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2818293