
புதுடில்லி: உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக 3 பெண்கள் உட்பட 9 நீதிபதிகளை உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. 3 பெண் நீதிபதிகளில் கர்நாடக மாநில உயர்நீதிமன்ற நீதிபதி நாகரத்னா உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக வரக்கூடும் எனக்கூறப்படுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள முதல் பெண் என்னும் சிறப்பை பெறுவார்.
கடந்த சில ஆண்டுகளில் பல நீதிபதிகள் ஓய்வு பெற்றதையடுத்து, தற்போது, உச்சநீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் பற்றாக்குறை உள்ளது. சமீபத்தில் நீதிபதி ரோஹிண்டன் பாலி நாரிமன் ஓய்வு பெற்றார். இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படுவதற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான உச்சநீதிமன்ற கொலிஜியம், 9 நீதிபதிகளின் பெயர்களை பரிந்துரைத்துள்ளது. இந்த பட்டியலில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் நீதிபதி பி.வி.நாகரத்னா, தெலுங்கானா உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ஹிமா கோலி மற்றும் குஜராத் உயர் நீதிமன்றத்தின் நீதிபதி பெலா திரிவேதி ஆகிய மூன்று பெண் நீதிபதிகள் உள்ளனர்.

முதல் முறையாக கொலிஜியம் மூன்று பெண் நீதிபதிகளின் பெயர்களை பரிந்துரைத்துள்ளது. இதில் நீதிபதி நாகரத்னா இந்தியாவின் முதல் பெண் தலைமை நீதிபதியாக வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கொலிஜியத்தின் பரிந்துரையை பரிசீலித்து, நீதிபதி பி.வி.நாகரத்னா உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டால், அவர் 2027-ல் இந்தியாவின் முதல் பெண் தலைமை நீதிபதி என்ற பெருமையை பெறுவார்.
கடந்த 2008ம் ஆண்டு கர்நாடக உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட பி.வி.நாகரத்னா, பின்னர் நிரந்தர நீதிபதியாக பணியமர்த்தப்பட்டார். இவரது தந்தை ஈ.எஸ்.வெங்கட்ராமைய்யா 1989ம் ஆண்டு ஜூன் முதல் டிசம்பர் வரை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2825836