
புது டில்லி: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வளையல் விற்பனை செய்த முஸ்லிம் இளைஞரை ஒரு கும்பல் கடுமையாக தாக்கிய வீடியோ வெளியாகி சர்ச்சையானது. 13 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றதாக அவர் மீது புகாரளிக்கப்பட்டு போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். முஸ்லிம் இளைஞரை தாக்கியதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிறன்று இந்தூரில் 25 வயது இளைஞர் ஒருவர் தெருவில் வளையல் விற்பனையில் ஈடுபட்டுள்ளார். அவரை ஒரு கும்பல் கடுமையாக தாக்கி உடைமைகளை எல்லாம் சோதனையிட்டனர். இவ்வீடியோ வெளியாகி தேசிய அளவில் சர்ச்சையானது. வளையல் விற்பனை செய்தவர் போலியான அடையாள அட்டைகளை வைத்திருந்துள்ளார். மேலும் 13 வயது சிறுமி ஒருவரிடம் வளையல் விற்பனையில் ஈடுபட்ட போது, அழகாய் இருக்கிறாய் என கூறி தகாத முறையில் தொட்டதாகவும் கூறப்படுகிறது. அதற்காக அக்கம்பக்கத்தினர் தாக்கியதாக புகாரளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து வளையல் விற்பனை செய்த இளைஞர் தஸ்லிம் அலி என்பவரையும், அவரை தாக்கிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக மத்திய பிரதேசத்தை ஆளும் பா.ஜ., அரசை ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

“அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் வர உள்ளதை ஒட்டி, வகுப்புவாத மோதலை தூண்டுவதற்கான முன்னோட்டம் தான் இச்சம்பவங்கள். எது சரி எது, தவறு என்று முடிவு செய்ய இவர்கள் யார். சட்டத்தின் ஆட்சி தான் நடக்கிறதா. இச்சம்பவத்தை உள்துறை அமைச்சர் நியாயப்படுத்துகிறார் என்றால், அவர் ஏன் அப்பதவியில் உள்ளார்” என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2829742