
சென்னை: தமிழகத்தில் கொரோனா எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு கூடுதல் தடுப்பூசி வழங்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு கூடுதல் தடுப்பூசி வழங்கப்படும். கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களில் ஏற்படும் நோய் பாதிப்புகளுக்கு ஏற்ப மாநில எல்லைப் பகுதிகளில் கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் தற்போது 12.5 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதால், தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை.

உருமாறிய கொரோனோ வைரஸ் குறித்து கண்டறிய தமிழகத்தில் இரண்டு ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளது. இதுவரை 32 பேருக்கு டெல்டா வகை வைரஸ் பாதிப்பும், 10 பேருக்கு டெல்டா பிளஸ் பாதிப்பும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்களது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2815691