சென்னை : ‘ஏரிகளில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுத்து நிறுத்த, மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட வேண்டும்’ என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., கூறியுள்ளார்.
அவரது அறிக்கை: ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, வீராணம், போரூர், பூண்டி, பழவேற்காடு உள்ளிட்ட ஏரிகளில் உள்ள நீரின் தன்மை, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் கண்காணிக்கப் படுகிறது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்து, மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் முகக்கவசம், முழு உடல் கவசம், கையுறைகள், ஊசி, மருத்துவக் கழிவுகள் போன்றவை, போரூர் ஏரியில் சட்டவிரோதமாக கொட்டப்படுகின்றன.இதே நிலைமை தான், முடிச்சூர் ஏரியிலும் காணப்படுகிறது.

சமீபத்தில், போரூர் ஏரியில் குப்பைகளை கொளுத்திய போது, அங்கு மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டது தெரிய வந்ததாக, செய்திகள் வந்துள்ளன.ஏரிகளில் கொட்டப்படும், குப்பைகள், மருத்துவ கழிவுகள் காரணமாக, ஏரி நீர் மாசடைந்து வருகிறது. சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையிலும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், ஏரிகளில், குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள், மருத்துவ கழிவுகள் கொட்டப் படுவதை தடுத்து நிறுத்த, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு, உத்தரவிட வேண்டும்.மருத்துவ கழிவுகளை, தரம் பிரித்து கையாள, மருத்துவமனைகளுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்க, முதல்வர் உத்தரவிட வேண்டும். இவ்வாறு, ஓ.பி.எஸ்., கூறியுள்ளார்.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2803945