
கடலூர் மண் கண்டெடுத்த மாபெரும் போராளி என்னுயிர் இளவல் கடல் தீபனது மறைவு நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமில்லாது இனத்திற்கே ஏற்பட்ட பேரிழப்பு என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சீமான் வெளியிட்ட அறிக்கை: நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் என்னுயிர்த்தம்பி கடல் தீபன் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பேரதிர்ச்சியடைந்தேன். அச்செய்தி கேள்வியுற்ற நொடிமுதல் ஆற்ற முடியா பெரும் வேதனைக்குள் சிக்குண்டு தவிக்கிறேன்.
அளவற்ற துயரத்தால் விழிகளில் கண்ணீர் நனைக்கிறேன். என் உயிரோடும், உடலோடும் எப்போதும் இணைந்த ஒன்று, இல்லாமல் போனது போல வேதனையின் உச்சத்தில் நிற்கிறேன்.
என்னுயிர்த்தம்பி கடல் தீபன் அவர்கள் கடலூர் மண் கண்டெடுத்த மாபெரும் இனமான போராளி. தமிழீழத் தாயகத்தில் நடந்த மாபெரும் இனப்படுகொலையைக் கண்டு, அதனைச் சகிக்க முடியாமல் வெளிநாட்டில் செய்துகொண்டிருந்த பணியை விட்டுவிட்டுத் தாய்நாட்டில் போராட்டக்களம் அமைக்கப் புறப்பட்டு வந்த புரட்சியாளன் அவன்.
நாம் தமிழர் கட்சி தொடங்கிய காலந்தொட்டு, என்னுடன் தோளுக்குத் துணையாக நின்று என் வாழ்வின் எல்லா ஏற்றத்தாழ்வுகளிலும் உடனிருந்து, உற்றத் துணையாய், உயிர்த்தம்பியாய் இருந்து காத்தவர்களில் அவனும் ஒருவன்.
இந்த இனத்தைக் காக்க இந்த மண்ணைக் காக்க தமிழர் மானத்தைக் காக்க என் தம்பி கடல் தீபன் எந்தப் புனித இலட்சியத்திற்காக இறுதிவரை போராடி நின்றானோ, அந்த இலக்கு வெல்ல அவன் உடன்பிறந்தாராகிய நாங்கள் எங்கள் உயிர் உள்ளவரை உறுதியோடு சமரசமில்லாமல் களத்தில் நிற்போம் என இச்சமயத்தில் உறுதி ஏற்கிறேன்.
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் என்னுயிர் இளவல், கடலூர் மண் கண்டெடுத்த மாபெரும் தமிழினப்போராளி கடல் தீபன் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம் என சீமான் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Source: https://news.lankasri.com/article/seeman-condolence-message-kadaldheepan-1628497102