
கோல்கட்டா: ‛‛ மே.வங்கத்தில் விரைவில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் பா.ஜ., வெற்றி பெறும்” என அக்கட்சியில் இருந்து விலகி, திரிணமுல் காங்கிரசில் சேர்ந்த முகுல் ராய் கூறியது, அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பின்னர் தனது தவறை உணர்ந்த அவர், திரிணமுல் என மாற்றிக்கூறினார்.
திரிணமுல் காங்கிரசில் முக்கிய தலைவராக இருந்த முகுல் ராய், பா.ஜ.,வில் இணைந்து சில வருடங்களாக பணியாற்றினார். சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் மம்தா தலைமையில், மீண்டும் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. பா.ஜ., சார்பில் கிருஷ்ணா நகர் வடக்கு தொகுதியில் முகுல் ராய் வெற்றி பெற்றார். இருப்பினும், வெற்றி பெற்ற அடுத்த சில நாட்களில் மீண்டும் திரிணமுல் காங்கிரசில் இணைந்தார்.
இந்நிலையில், கோல்கட்டாவில் நிருபர்களை சந்தித்த முகுல் ராய் கூறியதாவது: மே.வங்கத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெறும். திரிபுராவிலும் வெற்றி பெறும். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம் எனக்கூறினார். இது நிருபர்கள் மட்டுமின்றி, அங்கிருந்த திரிணமுல் காங்கிரஸ் நிர்வாகிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

உடனடியாக தனது தவறை புரிந்து கொண்ட முகுல் ராய், இடைத்தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் வேண்டாம். பா.ஜ., தோல்வியை சந்திக்கும். இங்கு திரிணமுல் மீண்டும் வெற்றி பெறுவதுடன், திரிபுராவிலும் தனது கணக்கை துவக்கும். மாநிலத்தில் பாஜ., எங்கும் இல்லை. அக்கட்சி அழிக்கப்பட்டுவிட்டது. மாநிலத்தை மம்தா தொடர்ந்து ஆட்சி செய்வார். இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஷாமிக் பட்டாச்சார்யா கூறுகையில், கிருஷ்ணாநகர் வடக்கு தொகுதி மக்களை முகுல்ராய் ஏமாற்றிவிட்டார். அவர் மீது இருந்த நம்பிக்கையை தகர்த்துவிட்ட அவர், தற்போது தெரியாமல் உண்மையை பேசியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2818337