
`எடியூரப்பா ஆதரவாளர்… கருணாநிதியுடனான சந்திப்பு… ஜெயலலிதாவுடன் கன்னடத்தில் நிகழ்ந்த சுவாரஸ்ய உரையாடல்… பதிமூன்றே ஆண்டுகளில் முதல்வர் பதவி’ – கர்நாடகாவின் புதிய முதல்வர் பசவராஜ் பொம்மை பற்றிய தகவல்களை இங்கே காணலாம்!
கர்நாடக முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்த நிமிடம் தொட்டே, `கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்?’ என்கிற கேள்வி அரசியல் உலகில் வலம் வரத் தொடங்கியது. அந்தக் கேள்விக்கு விடையாக `பசவராஜ் பொம்மை’ என்கிற பெயரை அறிவித்திருக்கிறது பா.ஜ.க மேலிடம். கர்நாடகாவின் புதிய முதல்வர் பசவராஜ் பொம்மையின் அரசியல் வரலாற்றை அலசுகிறது இந்தக் கட்டுரை!
முன்னாள் முதலமைச்சரின் மகன்!
கர்நாடகாவின் புதிய முதல்வராகப் பதவியேற்றிருக்கும் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர் எஸ்.ஆர்.பொம்மையின் மகன். எஸ்.ஆர்.பொம்மை 1988, 1989 காலகட்டத்தில் கர்நாடகாவின் முதலமைச்சராக இருந்தவர். மாநில அரசுகளைக் கலைக்க மத்திய அரசு பயன்படுத்தி வந்த 356-வது சட்டப் பிரிவுக்கு எதிராக வழக்குத் தொடுத்து வெற்றிபெற்றவர் எஸ்.ஆர்.பொம்மை.


Also Read
சினிமா தயாரிப்பாளர் டு சி.எம் – குமாரசாமி கடந்து வந்த பாதை
கர்நாடக அரசியல் வரலாற்றில், முன்னாள் முதல்வரின் மகன் முதலமைச்சராகப் பதவியேற்பது இது இரண்டாவது முறை. இதற்கு முன்பாக முன்னாள் பிரதமரும், கர்நாடகாவின் முன்னாள் முதல்வருமான தேவகவுடாவின் மகன் ஹெச்.டி.குமாரசாமி கர்நாடகாவின் முதலமைச்சராக இருந்திருக்கிறார்.
பிறப்பு, படிப்பு, வேலை!
61 வயதாகும் பசவராஜ் பொம்மை, 1960, ஜனவரி 28 அன்று ஹூப்லியில் பிறந்தார். பள்ளிப் படிப்பைத் தொடர்ந்து மெக்கானிக்கல் இன்ஞ்சினியரிங் துறையில் பொறியியல் பட்டம் பெற்றார். படித்து முடித்தவுடன் டாட்டா நிறுவனத்தில் பொறியாளராக இணைந்த கையோடு, ஜனதா தளம் கட்சியிலும் தன்னை இணைத்துக் கொண்டார்.
1998, 2004 ஆகிய ஆண்டுகளில் கர்நாடக சட்ட மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2008-ம் ஆண்டு ஜனதா தளத்திலிருந்து விலகி பாரதிய ஜனதாவில் ஐக்கியமானார். 2008, 2013, 2018 ஆகிய சட்டமன்றத் தேர்தல்களில் ஷிகான் (Shiggaon) சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

அமைச்சர் பதவி!
2008 முதல் 2013 வரை எடியூரப்பா அமைச்சரவையில் நீர்ப்பாசனத் துறை அமைச்சராக இருந்தார். 2019-ம் ஆண்டு மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்ற எடியூரப்பாவின் அமைச்சரவையில், உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார் பொம்மை. தொடர்ந்து 2020-ம் ஆண்டு, இவருக்குச் சட்டம் மற்றும் சட்டமன்ற விவகாரங்கள் துறைகள் ஒதுக்கப்பட்டன.
இவர் நீர்ப்பாசனத் துறை அமைச்சராக இருந்தபோது, இந்தியாவிலேயே முதன்முதலாக 100 சதவிகித குழாய் நீர்ப்பாசனம் பெற்ற பகுதியாக மாறியது ஷிகான்!
அமைச்சர் டூ முதலமைச்சர்!
பா.ஜ.க-வில் இணைந்து 13 ஆண்டுகள் மட்டுமே கடந்திருக்கும் நிலையில், கர்நாடகாவின் 23-வது முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கிறார் பசவராஜ் பொம்மை. எடியூரப்பாவுக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்படும் பொம்மை, எடியூரப்பாவின் லிங்காயத் சமுதாயத்தைச் சேர்ந்தவர்.
கர்நாடகாவில் 16-17 சதவிகித வாக்கு வங்கி கொண்டது லிங்காயத் சமுதாயம். எனவே, பொம்மை முதல்வராக்கப்பட்டதற்கான காரணங்களுள் ஒன்றாக அவரது சமுதாயமும் சொல்லப்படுகிறது. எடியூரப்பா கொடுத்த பேராதரவு காரணமாகத்தான் பொம்மை முதல்வராக்கப்பட்டிருக்கிறார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

கருணாநிதி, ஜெயலலிதா சந்திப்பு!
2009-ம் ஆண்டு பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அங்கு சென்றிருந்தார் தமிழ்நாட்டின் அப்போதைய முதல்வர் கருணாநிதி. கருணாநிதியை வரவேற்க அப்போதைய கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும் சில அமைச்சர்களும் நேரில் சென்றிருந்தனர். அந்த சமயத்தில் நீர்ப்பாசனத் துறை அமைச்சராக இருந்த பொம்மை எடியூரப்பாவோடு இணைந்து கருணாநிதிக்கு நினைவுப் பரிசு ஒன்றை வழங்கினார். இந்தச் சந்திப்பின்போது பொம்மைக்குக் கருணாநிதியுடன் பேச வாய்ப்புக் கிடைத்தது.
2012-ம் ஆண்டு காவிரி நதி நீர்ப் பிரச்னை தொடர்பாக டெல்லியில் பேச்சு வார்த்தை கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது மத்திய அரசு. அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளத் தமிழ்நாட்டின் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவும், கர்நாடகாவின் அப்போதைய முதலமைச்சர் ஜெகதீஷ் சேட்டரும் சென்றிருந்தனர். ஜெகதீஷ் சேட்டருடன் கர்நாடகாவின் அப்போதைய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பசவராஜ் பொம்மையும் உடன் சென்றிருந்தார்.
கூட்டத்துக்கு முன்பாக ஜெயலலிதா, ஜெகதீஷ் சேட்டர், பசவராஜ் பொம்மை ஆகிய மூவரும் ஒரே அறையில் காத்திருந்தனர். அப்போது மிகவும் இறுக்கமாக அமர்ந்திருந்த ஜெயலலிதாவிடம் எப்படிப் பேசுவது எனத் தெரியாமல் அமர்ந்திருந்தார் ஜெகதீஷ் சேட்டர்.

அந்த நேரத்தில், ஜெயலலிதாவுக்கு வணக்கம் சொல்லி கன்னடத்தில் நலம் விசாரித்திருக்கிறார் பசவராஜ் பொம்மை. ஜெயலலிதா கர்நாடகாவில் பிறந்தவர் என்பதால் கன்னடத்தில் பேசியதும் சிறு புன்னகையுடன் கன்னடத்திலேயே பதிலளித்திருக்கிறார். “நான் எஸ்.ஆர்.பொம்மையின் மகன்” என பசவராஜ் பொம்மை சொல்ல, அதற்கு, “உங்கள் அப்பாவை எனக்கு நன்கு தெரியும்” எனக் கன்னடத்திலேயே பதிலளித்திருக்கிறார் ஜெயலலிதா.
தொடர்ந்து, “நான் சரோஜா தேவியோடு மட்டுமே கன்னடத்தில் பேசிக்கொண்டிருந்தேன். இப்போது எனக்குக் கன்னடத்திலுள்ள பல வார்த்தைகள் மறந்தே போய்விட்டன” என்று சிரித்துக் கொண்டே பல விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார் ஜெயலலிதா. கூட்டத்துக்கு முன் சிரித்துப் பேசிய ஜெயலலிதா, கூட்டம் தொடங்கியவுடன் காவிரியிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டே ஆக வேண்டும் எனக் கறாராகப் பேசியது வேறு கதை!

பசவராஜ் பொம்மையின் குணம்!
கர்நாடகாவின் அனைத்து கட்சிகளிலும் பொம்மைக்கு நண்பர்கள் இருப்பதாகவும், அனைவருடனும் அனுசரித்துப் போகக் கூடியவர் என்றும் சொல்லப்படுகிறது. “சட்டமன்றத்தில் எப்போது கூச்சல் குழப்பங்கள் ஏற்பட்டாலும், அதைச் சரி செய்யக் கூடியவராகப் பொம்மை இருந்திருக்கிறார். எந்தவொரு முடிவை எடுப்பதற்கு முன்பும், அது குறித்துத் தெளிவாக ஆராய்ந்து தெரிந்து கொண்ட பின்பே முடிவுகளை எடுப்பார்” என்று பொம்மை பற்றி விவரிக்கிறார்கள் பா.ஜ.க நிர்வாகிகள்.