
‘பிரதமரே, கல்வெட்டு பிரிவை காப்பாற்றுங்கள்’ என்ற பதாகையை கையில் பிடித்துக் கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படங்களை, பல மூத்த வரலாற்று ஆய்வாளர்களும், கல்வெட்டியல் அறிஞர்களும், சமூக வலைதளங்களில் வெளியிடத் துவங்கியது, பரபரப்பை கிளப்பியது.
எதற்காக இந்த உருக்கமான வேண்டுகோள் என்பது குறித்து, தொல்லியல் ஆய்வாளர் ஸ்ரீதரன் கூறியதாவது:இந்திய தொல்லியல் துறையில், பல்வேறு பணியிடங்களை நிரப்ப, மத்திய அரசு விளம்பரம் செய்திருந்தது. அதில், ‘கல்வெட்டு ஆய்வாளர்’ என்ற பிரிவே இல்லை. இதைப் பார்த்து விட்டுத்தான் மூத்த ஆய்வாளர்களும், அறிஞர்களும், ‘கல்வெட்டு பிரிவை காப்பாற்றுங்கள்’ என்ற பதாகையை ஏந்த வேண்டியிருந்தது.இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. மைசூரு, நாக்பூர், லக்னோ, சென்னை ஆகிய இடங்களில் உள்ள இந்திய தொல்லியல் துறை அலுவலகங்களில் மொத்தம், 31 கல்வெட்டு ஆய்வாளர்கள் தான் உள்ளனர்.கொஞ்சம் யோசித்து பாருங்கள்.
இதுவரை இந்தியாவில், 60 ஆயிரம் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அதில், 20 ஆயிரம் கல்வெட்டுகள் தான் படியெடுக்கப்பட்டு, அதன் விபரங்கள் வாசிக்கப்பட்டுள்ளன. இன்னும் ஏராளமான கல்வெட்டுகளை படியெடுத்து வாசிக்க வேண்டும்.தமிழகத்திலேயே, 32 ஆயிரம் கோவில்கள் உள்ளன. இதில் எல்லாவற்றிலும் இல்லையென்றாலும், ஆயிரக்கணக்கான கோவில்களில் கல்வெட்டுகள் உள்ளன. அவை காலப் போக்கில் பல்வேறு காரணங்களால் சிதைந்து போய் விடும். அதற்கு முன், அவற்றை எல்லாம் கண்டுபிடித்துப் படியெடுக்க வேண்டாமா?இதுவரை, மத்திய தொல்லியல் துறை, தான் கண்டுபிடித்து வாசித்த கல்வெட்டு விபரங்களை, 39 தொகுதிகளாக வெளியிட்டுள்ளது; இன்னும் பல தொகுதிகள் வெளிவர வேண்டியுள்ளது.
அப்படியானால், அதற்கு உரிய கல்வெட்டு ஆய்வாளர்கள் தேவை இல்லையா; அதுவும் கல்வெட்டு ஆய்வு என்பது, மிக முக்கியமான சமுதாய பணி. அது, வழிபாட்டு வரலாற்றை மட்டும் சொல்வதில்லை; சமுதாய வரலாற்றையும் சொல்கிறது.உதாரணமாக, இன்று நாம் சென்னைக்கு அருகே உள்ள ஒரு பகுதியை, திரிசூலம் என்று அழைக்கிறோம். அன்றைக்கு அதன் பெயர், திரிசுரம். திருமுக்கூடலில், ஆதுர சாலை இருந்துள்ளது. நாவிதர்களுக்கான பணிகள் வரையறை செய்யப்பட்டுள்ளன.இதையெல்லாம் கல்வெட்டு வாயிலாகவே தெரிந்து கொண்டோம்.

கீழடி ஆய்வு பற்றி பேசுகிறோம். அதில் பானை ஓடுகள் கிடைத்துள்ளன. அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை கல்வெட்டு ஆய்வாளர்களால் தான் வாசிக்க முடியும். பல்வேறு நாணயங்கள் கிடைத்துள்ளன; அதன் முக்கியத்துவத்தையும், காலத்தையும் கணிக்க ஆய்வாளர்கள் தேவை.இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான், கல்வெட்டு ஆய்வாளர் பிரிவை வலிமைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.இவ்வாறு ஸ்ரீதரன் கூறினார்.
– நமது நிருபர் –
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2813989