
செஞ்சி-பச்சிளம் குழந்தையை கடுமையாக தாக்கி, வீடியோவில் பதிவிட்ட கொடூர தாயை, ஆந்திராவில் போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த மணலப்பாடி மதுரா, மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவழகன், 36; கூலித் தொழிலாளி. இவருக்கும், ஆந்திர மாநிலம், சித்துார் அடுத்த ராம்பள்ளியைச் சேர்ந்த துளசி, 22 என்பவருக்கும் 2016ம் ஆண்டு திருமணம் நடந்தது.இவர்களுக்கு கோகுல், 4; பிரதீப், 2 என இரண்டு மகன்கள். தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், ஒன்றரை மாதத்திற்கு முன் வடிவழகன், மனைவி துளசியை மட்டும் அவரது தாய் வீடான சித்துாருக்கு அனுப்பி விட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம், துளசி விட்டுச் சென்ற மொபைல் போனில் இருந்த ‘வீடியோ’க்களை வடிவழகன் பார்த்துள்ளார். அதில், கடந்த பிப்ரவரி மாதம் துளசி, குழந்தை பிரதீப்பின் வாயில் பல முறை குத்தி ரத்தம் சொட்டும் காட்சியும், குழந்தையின் பாதத்தில் தொடர்ந்து பல முறை குத்தியதில் கால் எலும்புகள் உடைந்து குழந்தை துடிதுடிக்கும் வீடியோக்கள் இருந்துள்ளன.அப்போது, இந்த காயங்கள் குறித்து கேட்டபோது, குழந்தை தவறி விழுந்ததால் ஏற்பட்டது என வடிவழகனிடமும், குடும்பத்தாரிடமும் தெரிவித்துஉள்ளார்.

இந்த வீடியோக்களை வடிவழகன், தனக்கு தெரிந்தவர்களுக்கு அனுப்பியுள்ளார்.அது, தமிழகம் முழுதும், ‘வாட்ஸ் ஆப்’ குரூப்பில் வேகமாக பரவியது. இதையடுத்து, சத்தியமங்கலம் போலீசார் நேற்று முன்தினம் இரவு மணலப்பாடி, மோட்டூருக்குச் சென்று வடிவழகனிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, போலீசாரிடம் வடிவழகன் புகார் அளித்தார்.
கையால் தாக்குவது, சித்ரவதை செய்வது, உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் கொடூரமாக தாக்குவது மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில், துளசி மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
ஆந்திரா மாநிலத்தில் இருந்த துளசியை நேற்று சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் தங்க குருநாதன் தலைமையிலான போலீசார் கைது செய்து, சத்தியமங்கலம் அழைத்து வந்தனர்.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2833238