கோவை பாலக்காடு சாலை மதுக்கரை அருகே ராணுவ படைப்பிரிவு அலுவலகம் உள்ளது. அந்த வளாகத்தில் நுழைவு வாயிலில் வெற்றிவேல்.. வீரவேல் என்ற வாசம் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்தாண்டு பா.ஜ.க முன்னெடுத்த வேல் யாத்திரையின் போது, ‘வெற்றிவேல்.. வீரவேல்’ வாசகம் முன்வைக்கப்பட்டது.

பிரதமர் மோடி தமிழ்நாடு வந்திருந்தபோது கூட ‘வெற்றிவேல்.. வீரவேல்’ என்று கூறினார். பா.ஜ.க-வின் பல நிர்வாகிகளும் தேர்தல் பிரசாரத்தில் அந்த வாசகத்தை பயன்படுத்தினர். இதையடுத்து, சமூகவலைதளங்களில் இந்த விவகாரம் பேசு பொருளாகியுள்ளது.
தேசிய மனித உரிமைகள் அமைப்புகளின் கூட்டமைப்பு மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் ஷேக் முஹம்மது, ‘இந்தியா பல மதங்கள், பல மொழிகள் பேசும் பல்சமய மக்கள் வாழுகின்ற ஜனநாயக நாடு. இந்திய ராணுவம் என்பது இந்திய மக்கள் எல்லோருக்கும் பொதுவானது. குறிப்பாக மத அடையாளங்களை கடந்து நாட்டை பாதுகாக்கும் பாதுகாப்பு கட்டமைப்புதான் நமது ராணுவம்.

நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட துறைகளில் மத அடையாளங்களை பொருத்துவது நாட்டின் இறையாண்மைக்கு உகந்ததல்ல. எனவே மதம் சார்ந்த வார்த்தைகளை அப்புறப்படுத்த வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து பாதுகாப்புத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘ராணுவத்தில் உள்ள ஒவ்வொரு படைப் பிரிவுக்கும் இப்படி தனித்தனி வெற்றி முழக்கங்கள் இருக்கும். கேரளாவில் அடிக்கொல்லு (Strike and Kill) என்ற போர் முழக்கம் கடந்த காலம் முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெற்றிவேல் வீரவேல் என்பது தமிழர்களின் போர் முழக்கம்.

அதனால்தான், அதை குறிப்பிட்டுள்ளோம். இந்த ராணுவ படைப்பிரிவு தொடக்கக் காலத்தில் இருந்தே இந்த வாசகம் இடம்பெற்றுள்ளது. மற்றபடி, இதற்கும் மதத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று கூறியுள்ளனர்.