
புதுடில்லி: ‘கேரள சட்டசபையில் வரம்பு மீறி செயல்பட்ட எம்.எல்.ஏ.,க்கள், மக்கள் சொத்துக்களை சேதப்படுத்தி உள்ளனர். பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தி இருக்கும் அவர்களின் செயலை, அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் சிறப்பு சலுகையாகவும், சட்ட பாதுகாப்பாகவும் கருத முடியாது. ‘தங்கள் பணியை சிறப்பாக செய்யவும், எவ்வித அச்சுறுத்தலும் இன்றி பணியை மேற்கொள்ளவுமே எம்.எல்.ஏ.,க்களுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ‘அதை மீறுவதை கருத்து சுதந்திரமாக எடுத்துக் கொள்ள முடியாது’ -என்ற உத்தரவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ளது.
கேரளாவில் 2015ல், காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி ஆட்சி இருந்தது. நிதி அமைச்சராக இருந்த மாணி, பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது அதை எதிர்த்து, இடதுசாரி ஜனநாயக முன்னணி எம்.எல்.ஏ.,க்கள், சபையில் ரகளையில் ஈடுபட்டனர். கம்ப்யூட்டர்கள், மைக்குகள் உடைக்கப்பட்டன. இதை தொடர்ந்து, அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது. தற்போதைய அமைச்சர் சிவன் குட்டி உள்ளிட்ட எம்.எல்.ஏ.,க்கள் பலர் மீதும் வழக்கு பதியப்பட்டது. அதை எதிர்த்து அவர்கள் வழக்குப் போட்டு, அது உச்ச நீதிமன்றம் வரை சென்றது. அந்த வழக்கில் தான், மேற்குறிப்பிட்ட உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்துள்ளனர்.
இதையடுத்து, இனிமேல் சட்டசபையிலோ, பார்லிமென்டிலோ ரகளையில் ஈடுபட்டு, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் மக்கள் பிரதிநிதிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கலாம் என்பது உறுதியாகி உள்ளது. இந்த உத்தரவு குறித்து, தமிழக அரசியல் கட்சி பிரமுகர்களிடம் கேட்டோம். அவர்களின் கருத்து:-

ஜனநாயக நடைமுறையில் நல்ல மாற்றம்
சட்டசபை நடவடிக்கைகளை அமைதியாக மேற்கொள்ளவும், மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புடன் நடந்து கொள்ளவும், சில கட்டுப்பாடுகள் இருந்தால் நல்லது தான். ஜனநாயக வழியில் சபை நடவடிக்கைகள் இருக்க, நீதிமன்றம் அளிக்கும் ஆலோசனைகளை ஆரோக்கியமாகவே எடுத்து கொள்ளலாம்.
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், செய்தி தொடர்பு இணை செயலர், தி.மு.க.,
பதவிக்கு வேட்டு வைக்க வேண்டும்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், மக்கள் குறைகளை தீர்ப்பதற்காகவே பார்லிமென்ட், சட்டசபைக்கு செல்கின்றனர். சட்டம் இயற்றும் இடத்தில் இருக்கும் இவர்கள், சட்டம் – ஒழுங்கை கையில் எடுத்து, சபை நடவடிக்கைகளை குலைக்கும் வகையில் நடப்பதை ஏற்க முடியாது. சபையின் மாண்புகளை குலைக்கும் வகையில் செயல்படும் உறுப்பினர்களின் பதவி பறிக்கப்படும் என்றால், இதுபோன்ற பிரச்னைக்கு முழுமையாக தீர்வு காணப்பட்டு விடும். இதை மத்திய- – மாநில அரசுகள் சட்டமாக கொண்டு வர வேண்டும். –
கோவை செல்வராஜ், செய்தி தொடர்பாளர், அ.தி.மு.க.,
குறைபாடுகள் களையப்படலாம்-
மக்கள் பிரதிநிதிகள், யாரையும் விட உயர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் வன்முறையில் ஈடுபடுவது, அரசியல் சட்டத்தை மீறும் செயல் மட்டுமல்ல; அவர்கள் மதிப்பதாக சொல்லும் மக்கள் மன்றத்தின் மாண்பை குலைக்கும் செயல். உச்ச நீதிமன்றம், கேரள சட்டசபையில் நடந்த அராஜக செயல் குறித்து கூறியுள்ள கருத்துகள் சரியானவையே. இந்நிலை தொடர்ந்தால், அது தேசத்துக்கும், ஜனநாயகத்துக்கும் வலுவூட்டும் செயலாக இருக்கும். நாராயணன் திருப்பதி, செய்தி தொடர்பாளர், தமிழக பா.ஜ.,
தீர்வு எட்டப்பட வேண்டும்!
எதிர்ப்பதும், போராடுவதும் ஜனநாயக உரிமை. அதை யாரும் கேள்வி கேட்க முடியாது. எந்த போராட்டமும் மக்களுக்கான போராட்டமாக இருக்க வேண்டும். கேரள விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பாக கூறவில்லை; அறிவுரை மட்டும் தான். ஜனநாயக மாண்புகளை காக்க, அது தேவையான அறிவுரை என பலர் கூறினாலும், சபைக்குள் நடக்கும் ஒரு விஷயத்துக்குள் உச்ச நீதிமன்றம் எப்படி தலையிட முடியும் என்ற விவாதமும் நடக்கிறது. இது குறித்த ஆரோக்கியமான விவாதங்களும், ஆய்வுகளும் நடந்து, நல்ல தீர்வு கிடைத்தால், அது ஜனநாயகத்திற்கு வலுவூட்டும்.
-செல்வப்பெருந்தகை, சட்டசபை குழு தலைவர், தமிழக காங்.,
– நமது நிருபர் —
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2813953