
குஜராத் மாநிலத்தில், மகாத்மா காந்தி வாழ்ந்த சபர்மதி ஆசிரமத்தைப் புதுப்பித்து நவீனப்படுத்துவதற்கு, மத்திய அரசும், குஜராத் மாநில அரசும் மேற்கொள்ளும் முயற்சி, கடும் விமர்சனத்தையும், கண்டனத்தையும் சந்தித்துள்ளது.
இது தொடர்பாக, 150 வரலாற்று ஆசிரியர்களும், சமூக ஆர்வலர்களும் இணைந்து வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை:
பழம்பெருமை வாய்ந்த சபர்மதி ஆசிரமத்தை, இன்றைய அரசு 54 ஏக்கர் பரப்பளவில் உலகத் தரத்திலான சுற்றுலாத் தலமாக மாற்ற முடிவு செய்துள்ளது. இத்திட்டத்துக்காக 1,200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இதில், புதிய அருங்காட்சியகங்களும், கலையரங்கமும், ஓய்வறைகளும், கடைகளும், உணவு கூடங்களும் கட்டப்பட உள்ளன.இது, அனைத்து காந்திய நிறுவனங்களையும் கையகப்படுத்தி, வணிக தலமாக மாற்றும் திட்டத்தின் ஒரு பகுதி. இதை நாம் ஒருங்கிணைந்து எதிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த காந்தியவாதிகளின் கருத்துக்கள்:
காந்தி அமைதி நிறுவன செயலர் சூ.குழந்தைசாமி: காந்தியே இன்று இருந்தாலும், இதை வன்முறையின் வெளிப்பாடு என்று தான் கருதியிருப்பார். கருவறையின் சக்தியில் நம்பிக்கை கொள்பவர்கள், அதைக் காட்சிப் பொருளாக்க மாட்டார்கள். அதிலும் அதை ஜோடனை செய்து, லாபம் ஈட்ட முற்படவும் மாட்டார்கள்.
காந்தி கல்வி நிலையத்தை சேர்ந்த அண்ணாமலை: சபர்மதி ஆசிரமத்துக்கு வருபவர்கள் வெறும், ‘டூரிஸ்ட்’கள் அல்ல. காந்திய தொண்டர்கள், ஆசிரமத்தோடு உணர்வு ரீதியாக ஒன்றியவர்கள். அப்படிப்பட்ட இடத்தை, ‘டூரிஸ்ட் ஸ்பாட்’ ஆக மாற்றுவதை எப்படி ஏற்க முடியும்?
சமூக நல ஆர்வலரும் காந்திய மதிப்பீடுகளை முன்னெடுத்துச் செல்பவருமான, ‘பிரைம் பாயின்ட்’ சீனிவாசன்: தொன்மையான கோவில்களை கூட, பழைமை மாறாமல் புனருத்தாரணம் செய்கிறோம். இது, அவசியம் என்பதால் தான் பக்தர்கள் ஏற்கின்றனர். நீதிமன்றங்களும் கூட, பழமை மாறாமல் தொல்லியல் இடங்களை காப்பாற்றுவதற்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளன. இதையெல்லாம் பார்க்கும் போது, 100 ஆண்டுகள் பழமையான சபர்மதி ஆசிரமத்தை சீர்செய்வதில் எந்தத் தவறும் இல்லை
– நமது நிருபர் –
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2818989