
‘‘கடந்த 18 ஆண்டுகளாக, வாசனுக்கு விசுவாசமாக இருந்தும் உரிய முக்கியத்துவம் கிடைக்காததால், கட்சியிலிருந்து வெளியேறுகிறேன்’’ என்கிறார், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின், வேலூர் மத்திய மாவட்டத் தலைவராக இருந்த பி.எஸ்.பழனி.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின், வேலூர் மத்திய மாவட்டத் தலைவர் பி.எஸ்.பழனி, திடீரென கட்சியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், வேலூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, முன்கூட்டியே அதற்கான களப்பணிகளில் ஈடுபட்டுவந்தார் பழனி. ஆனால், கூட்டணிக்குத் தலைமைப் பொறுப்பேற்றிருந்த அ.தி.மு.க-வே, வேலூரில் நேரடியாக வேட்பாளரைக் களமிறக்கியதால், பழனிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.
‘‘2016 சட்டமன்றத் தேர்தலில், அணைக்கட்டுத் தொகுதியில் மக்கள் நலக்கூட்டணியின் வேட்பாளராகக் களம் கண்ட அனுபவமும் தனக்கு உண்டு. பிரதான கட்சிகளுக்கு நிகராக த.மா.கா-வின் கட்டமைப்பும் வேலூரில் வலுவாக இருக்கிறது.

நானும் உள்ளூர்காரன். மக்களுக்கு நல்ல பரிச்சியமானவனும்கூட’’ என்று சீட்டுக்காகக் கடைசி வரைப் போராடியும் பழனியின் குரலைக் கேட்காமல் விட்டது, த.மா.கா தலைமை. என்றாலும், அ.தி.மு.க வேட்பாளருடன் இணைந்து தீவிர பிரசாரம், வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவந்தார். ஆனாலும், வேலூர் தொகுதியில் அ.தி.மு.க தோல்வியுற்றது. சீட் மறுக்கப்பட்டது முதல் உரிய முக்கியத்துவம் கிடைக்காதது வரையிலான குமுறலை மீண்டும் தலைமையிடத்தில் முறையிட்டிருக்கிறார் பழனி. அப்போதும், த.மா.கா தலைமை முறையான பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால்தான், கட்சியிலிருந்தே விலகும் முடிவுக்கு வந்திருக்கிறாராம் பி.எஸ்.பழனி.
இதுகுறித்து, அவரிடமே பேசினோம். ‘‘நான், 1998 முதல் 2002 வரை த.மா.கா-வில் அடிப்படை உறுப்பினராக இருந்தவன். பின்னர், 2003-லிருந்து 2007 வரை காங்கிரஸ் கட்சியில், வேலூர் நகர செயலாளராகப் பதவி வகித்தேன். தொடர்ந்து, உட்கட்சித் தேர்தல் மூலம் வெற்றிபெற்று வேலூர் பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர், அகில இந்திய இளைஞர் செயலாளர், ஆந்திர மாநில இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் ஆகிய பதவிகளையும் வகித்துள்ளேன்.

காங்கிரஸிலிருந்து வாசன் வெளியே வந்தப் பின் நானும் அவருடனேயே வந்துவிட்டேன். 2015-ஆம் ஆண்டு முதல் தமிழ் மாநில காங்கிரஸில், வேலூர் மத்திய மாவட்ட தலைவராக இருந்துவருகிறேன். சொந்தப் பணத்தை செலவழித்துதான், வேலூரில் கட்சியை வளர்த்துள்ளேன். நான் ஒருவன் மட்டுமே இளம் வயது மாவட்டத் தலைவர் என்பதால், கட்சிப் பணிகளை ஈடுபாடுடன் செய்துவந்தேன். கடந்த 18 ஆண்டுகளாக, வாசனுக்கு விசுவாசமாக இருந்தாலும் எனக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்காததால், கட்சியிலிருந்து வெளியேறுகிறேன். விலகல் கடிதத்தையும் உரிய விளக்கத்துடன் த.மா.கா தலைமைக்கு அனுப்பிவிட்டேன்’’ என்கிறார்.
இதனிடையே, பி.எஸ்.பழனி விரைவில் அ.தி.மு.க-வில் இணையவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Source: https://www.vikatan.com/news/politics/vellore-district-chairman-resigns-from-tamil-manila-congress