
சென்னை-”நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில், ‘ஜெய்ஹிந்த்’ என்ற வார்த்தையை, நாம் எல்லாரும் பயன்படுத்த, நீங்கள் முயற்சி செய்ய வேண்டும்,” என, பா.ஜ., – எம்.எல்.ஏ., – எம்.ஆர்.காந்தி பேசினார்.
தமிழக சட்டசபையில், கவர்னர் உரையில் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை இடம் பெறவில்லை. இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை சுட்டிக்காட்டி, பா.ஜ., – எம்.எல்.ஏ., காந்தி நேற்று சட்டசபையில் பேசியதாவது:வேளாண் பட்ஜெட்டில், முதல் முயற்சியாக வெற்றிகரமாக திட்டங்களை சொல்லி இருக்கிறீர்கள்.
தமிழகத்தின் வேளாண்மை முன்னேற்றம் அடைய வேண்டும்என்பதற்காக, இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.நுாறு நாட்களை நிறைவு செய்துள்ள இந்த ஆட்சிக்கு வாழ்த்துகள். இன்று 75வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம். ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை சொல்லாததற்காக, இந்த சட்டசபையில் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.

எனவே, 75வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிற நாம், ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை எல்லாரும் பயன்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.அதைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு, ‘நீங்களே பதிவு செய்து விட்டீர்கள்; நன்றி’ என்றார்.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2823582