
புதுடில்லி-‘வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய அமைப்புகள் நடத்தி வரும் போராட்டத்தில் இறந்த விவசாயிகள் பற்றி, ஜே.பி.சி., எனப்படும், பார்லி., கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என, ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
டில்லியில் ஜனாதிபதிராம்நாத் கோவிந்தை அகாலி தளம், தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாடு ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் நேற்று சந்தித்து மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:மத்திய அரசு அமல் படுத்தியுள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக, விவசாய அமைப்புகள் கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக டில்லி எல்லையில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்தப் போராட்டத்தில் விவசாயிகள் பலர் இறந்ததாக சந்தேகிக்கிறோம். இது பற்றி ஜே.பி.சி., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். விவசாயிகள் பிரச்னை, போன் ஒட்டு கேட்பு விவகாரம் ஆகியவை பற்றி பார்லிமென்டில் விவாதிக்க, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. சிவசேனா, பகுஜன் சமாஜ், ராஷ்ட்ரீய லோக்தளம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகளும் இந்த மனுவில் கையெழுத்திட்டிருந்தன.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2814121