
விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ரெய்டுக்கு பின்னால் இருந்து செயல்பட்டதே தற்போது தி.மு.க அரசில் அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி தான் என்று எடப்பாடி தரப்பு போட்டுக்கொடுத்தது.
“முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் தமிழக அரசின் லஞ்ச ஒழிப்பு துறை நடத்திய ரெய்டுக்கு பிறகு அ.தி.மு.க தலைவர்கள் டெல்லிக்கு படையெடுத்தனர். அதன் தாக்கம் இப்போதுதான் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது” என்கிறார்கள் அ.தி.மு.க வினர். அமலாக்கப் பிரிவில் செந்தில் பாலாஜிமீது பதிவான புகாரை அடிப்படையாக வைத்தே இந்த கருத்தும் பகிரப்படுகிறது.

கடந்த மாதம் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புக் காவல்துறை சோதனை செய்தது. தி.மு.க அரசு பொறுப்பேற்ற பிறகு விஜயபாஸ்கர் அலுவலகம், வீடுகளில் நடந்தது முதல் ரெய்டு. இந்த ரெய்டு நடந்தவுடனே அ.தி.மு.கவினர் மீது பழிவாங்கும் நடவடிக்கையை தி.மு.க அரசு கையில் எடுத்துள்ளது என்று கூறி அ.தி.மு.க தலைமை ஆர்பாட்டத்தை நடத்தியது. ஆனால், அந்த ஆர்பாட்டம் பெரிய பரபரப்பை உண்டு பண்ணாமல் சலசலத்துப்போனது. இந்நிலையில் ரெய்டு நடந்த சில தினங்களில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியும் டெல்லிக்கு சென்றனர்.
“அ.தி.மு.க தலைவர்களின் டெல்லி பயணமே, தி.மு.க அரசின் நடவடிக்கைகளிலிருந்து தங்களை காத்துக்கொள்ளவே” என்கிற பேச்சு அப்போதே எழுந்தது. இந்த பயணத்தில் முன்னாள் அமைச்சர் வேலுமணியும் இடம்பெற்றார். டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த அ.தி.மு.கவின் இரட்டை தலைமை அவரிடம் “தி.மு.க அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கும்” என்கிற தகவலையும் சொன்னார்கள். அப்போது விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ரெய்டுக்கு பின்னால் இருந்து செயல்பட்டதே தற்போது தி.மு.க அரசில் அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜிதான் என்று எடப்பாடி பிரதமர் மோடியிடம் கூறியுள்ளார். மேலும், செந்தில் பாலாஜி மீது ஏற்கனவே உள்ள புகார்கள் குறித்த விவரங்களையும் அப்போது பிரதமரிடம் கொடுத்துள்ளார்கள்.

மோடியுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு மறுதினம் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் பன்னீர் – பழனிசாமி தரப்பு சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பிலும் செந்தில் பாலாஜிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அவர்கள் குறிப்பிட்டு சொன்ன ஒரு விவகாரமே இப்போது செந்தில் பாலாஜிக்கு சிக்கலாக மாறியுள்ளது. செந்தில் பாலாஜி ஏற்கனவே அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது அரசு வேலை வாங்கித் தருவதாக 1.62 கோடி ரூபாய் மோசடி செய்ததாக வழக்கு பதிவானது. இந்த வழக்கு விசாரணை கடந்த 8-ம் தேதி நீதிமன்றத்திற்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக எந்த எதிர்தரப்பு வாதமும் முன்வைக்கப்படவில்லை. அதே போல் பணம் கொடுத்தவர்களுக்கு பணம் திருப்பி அளிக்கப்பட்டதாகவும் செந்தில் பாலாஜி தரப்பு சொல்லியதால் வழக்கை நீதிமன்றம் முடித்துவைத்தது.
இந்நிலையில்தான், ஏற்கனவே குற்றப்பிரிவு காவல்துறை இந்த வழக்கில் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் மத்திய அமலாக்கப் பிரிவு ஒரு புதிய வழக்கை பதிவு செய்துள்ளது. அதாவது தமிழக காவல்துறை முடித்து வைத்த ஒரு வழக்கை மத்திய அரசு இப்போது கையில் எடுத்துள்ளது. இந்த வழக்கு குறித்த விவரங்களையும் தமிழக குற்றப்பிரிவு காவல்துறையிடமிருந்து அமலாக்கப் பிரிவு கேட்டுப்பெற்றுள்ளது. இந்த வழக்கை வைத்து செந்தில் பாலாஜிக்கு நெருக்கடியைக் கொடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்கிறார்கள். குறிப்பாக, அ.தி.மு.கவினால் வளர்ந்த செந்தில் பாலாஜி இப்போது அ.தி.மு.க புள்ளிகளை தி.மு.க வுக்கு கொண்டுபோகும் வேலையை முன்னெடுத்துள்ளார். அதோடு சேலம் மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக இருந்துக்கொண்டு எடப்பாடிக்கு எதிரான அரசியல் மூவ்களை செய்வது எடப்பாடிக்குக் கடுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதை பக்குவமாக பா.ஜ.க அரசிடம் விளக்கியிருகிறார்கள் எடப்பாடியும் பன்னீரும். அதன் விளைவுதான் அமலாக்கப்பிரிவு ஆக்ஷனில் இறங்கக் காரணம் என்கிறார்கள்.

அதாவது அ.தி.மு.க வினர் மீது தி.மு.க அரசு அடுத்தடுத்த ஆக்ஷனில் இறங்கினால், தி.மு.கவினர் மீது நாங்களும் அதிரடி நடவடிக்கைகளில் இறங்குவோம் என்பதைக் காட்டவே செந்தில் பாலாஜி மீதான வழக்கின் காரணம் என்கிறார்கள். மற்றொருபுறம் தங்களை மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு கண்டுகொள்ளாமல் விட்டுவிடுமோ என்கிற அச்சத்தில் அ.தி.மு.க தரப்பு இருந்தது. இப்போது செந்தில் பாலாஜி மீது அமலாக்கப் பிரிவு வழக்குப் பதிவு செய்திருப்பதால், “நாம் டெல்லியில் பற்ற வைத்த நெருப்பு புகைய ஆரம்பித்துள்ளது” என்கிற மகிழ்ச்சியில் எடப்பாடி தரப்பு உள்ளது. இன்று (11 ஆகஸ்ட் 2021) அமலாக்கப்பிரிவு முன்பாக செந்தில் பாலாஜி ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருமாத கால அவகாசம் கேட்டுக் கடிதம் எழுதியுள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி. சட்டப்பேரவை நிகழ்வில் பங்கேற்க இருப்பதால் விலக்கு கோருவதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.