
குடியரசுத் தலைவர் வருகையையொட்டி பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்ட சென்னை தலைமைச் செயலகம்.
சென்னை தலைமை செயலகத்தில் சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்திறப்பு விழா நாளை நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நாளை மாலை 5 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்ற வளாகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவப் படத்தினை திறந்து வைக்க உள்ளார். இந்த நிலையில் சட்டமன்ற நூற்றாண்டு விழாவிற்காக தலைமைச்செயலகம் முழுவதும் கண்ணை கவரும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
நாளை நடைபெற உள்ள சட்டமன்ற நூற்றாண்டு விழாவிற்கு இன்று காலை முதலே போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்காக தலைமைச் செயலகத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிவிரைவுப்படையினர், போக்குவரத்து காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் என 3000க்கும் மேற்ப்பட்ட காவலர்கள் தலைமைச் செயலகத்தைச் சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தலைமைச் செயலகத்திற்குள் வரும் வாகனங்கள் மிகுந்த சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறது.
மேலும் தகுந்த அடையாள அட்டை கொண்டவர்கள் மட்டுமே தலைமைச் செயலகத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். அவ்வப்போது மோப்பநாய் நாய் கொண்டு கோட்டை முழுவதும் சோதனையிடப்பட்டு வருகின்றன. நாளை வரவுள்ள ஜனாதிபதியை வரவேற்கும் விதமாக காவலர்கள் பாதுகாப்பு ஒத்திகை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனில் இருந்து தலைமைச் செயலகம் அந்த பாதுகாப்பு படையினர அங்கிருந்து விமான நிலையம் வரை பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபடுகின்றனர்.மேலும் குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி தலைமை கழக பணியாளர்கள் நாளை பிற்பகல் உடன் வீட்டுக்கு செல்ல அறிவுறுத்தப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Source: https://tamil.news18.com/news/tamil-nadu/president-ramnath-govind-chennai-visit-full-police-protection-in-chennai-secretariat-pand-hrp-520423.html