
பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் வழியாக நேற்று கலந்துரையாடினார்.
அப்போது முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:கொரோனா பெருந்தொற்றை சமாளிக்கும் கடினமான பணியை புதிதாக பொறுப்பேற்ற அரசு எதிர்கொள்ள வேண்டிய நிலை இருந்த ஒரே பெரிய மாநிலம் தமிழகம் தான்.என் அரசு இச்சவாலை எதிர்கொண்டு உயிரிழப்புகளை குறைத்து நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.தமிழகத்துக்கான ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்கியதற்காக மத்திய அரசுக்கு நன்றி. தடுப்பூசிகள் வீணடிக்கப்படுவதை எமது அரசு 9 சதவீதத்தில் இருந்து முழுமையாக தவிர்த்துள்ளது.
தடுப்பூசி குறித்த விழிப்புணர்வையும் பெரிய அளவில் வெற்றிகரமாக ஏற்படுத்தி உள்ளது. தற்போது தமிழகத்தில் தடுப்பூசிக்கான தேவை மிகவும் அதிகரித்துள்ளது.எனினும் பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்துக்கான ஒதுக்கீடு மிகவும் குறைவாகவே உள்ளது. இந்த நெருக்கடியை சமாளிக்க சிறப்பு ஒதுக்கீடாக ஒரு கோடி தடுப்பூசிகளை வழங்க வேண்டும். இரண்டு கோடி குடும்பங்களுக்கு இரு தவணைகளில் 4 000 ரூபாயை கொரோனா நிவாரண தொகையாக கொடுத்துள்ளோம். மேலும் 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பையும் இந்த குடும்பங்களுக்கு வழங்கி உள்ளோம்.
மத்திய அரசு முன்னுரிமை ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கும் கூடுதல் அரிசியை அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் தமிழக அரசு விரிவுபடுத்தி உள்ளது. இதேபோல் தகுதி உடைய அனைத்து அட்டைதாரர்களுக்கும் இத்திட்டத்தை மத்திய அரசு விரிவுபடுத்த வேண்டும்.தற்போது நிலவும் சூழலை கருத்தில் வைத்து கொரோனா தொடர்பான அனைத்து பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி. சேவையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

மூன்றாம் அலை வரும் என கூறப்படுகிற நிலையில் அதை சமாளிப்பதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். அதை எதிர்கொள்வதற்கு வசதியாக மாநிலங்களுக்கு மேலும் பல உதவிகளை மத்திய அரசு வழங்க வேண்டும்.பள்ளி கல்லுாரிகள் மூடப்பட்டிருக்கும் தற்போதைய சூழலில் ‘நீட்’ போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை நடத்துவது தொற்றுப் பரவலுக்கு வழி வகுக்கும். எனவே இம்முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.இவ்வாறு முதல்வர் கூறினார்.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2803779