
பார்லிமென்டை சுமுகமாக நடத்த, எதிர்க்கட்சிகளை மத்திய அரசு திருப்திபடுத்த வேண்டும். ‘பார்லிமென்டை முடக்குவது ஜனநாயக நடவடிக்கை தான்’ என, பா.ஜ., தலைவர்கள் அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ் சொன்னதை திரும்ப பெற வேண்டும்; பெகாசஸ் உளவு குறித்து கூட்டு பார்லி குழு விசாரிக்க வேண்டும்.
– தமிழக காங்., துணைத் தலைவர் ராமசுகந்தன்
‘இதைத் தான், ஆளும் தரப்பு, ‘பார்லிமென்ட்டை காங்., ‘ஹைஜாக்’ செய்கிறது’ என்கின்றனர். பார்லிமென்டை சுமுகமாக நடத்த ஒத்துழைப்பு கொடுக்க, இத்தனை நிபந்தனைகளா…’ என, ஆச்சர்யம் தெரிவிக்கத் தோன்றும் வகையில், தமிழக காங்., துணைத் தலைவர் ராமசுகந்தன் அறிக்கை.
பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக பதிலளிக்க, மோடி அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இதன் மூலம், நம் அனைவரையும் இந்த அரசு ஒட்டு கேட்டது உறுதியாகியுள்ளது. எனவே, உச்ச நீதிமன்றம் மேற்பார்வையில் விரிவான நீதி விசாரணை தேவை.
– மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீத்தாராம் யெச்சூரி
‘உங்களை ஒட்டு கேட்டு, மத்திய அரசு என்ன செய்யப் போகிறது… உங்கள் செயல்பாடுகள் தான் அனைவரும் அறிந்ததாயிற்றே…’ என, சொல்லத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீத்தாராம் யெச்சூரி அறிக்கை.
பெகாசஸ் ஒட்டுகேட்பு குறித்து, நீதிமன்ற விசாரணை வேண்டும் என, பிற எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து, எம்.பி.,யான நானும் வலியுறுத்தினேன். நான் கூடுதலாக, மோடி ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினேன். ஏனெனில், கொரோனாவை விட பெகாசஸ் கொடியது.
– விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்

‘தொகுதி மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய பாடுபடுவீர்கள் என, எம்.பி.,யாக்கி அனுப்பி வைத்தால், போராட்டமா நடத்துகிறீர்கள் என, தொகுதி மக்கள் கோபப்பட போகின்றனர்…’ என, சொல்லத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை.
ஒவ்வொரு பா.ஜ.,வினரும் தேச விரோதிகளை களையெடுப்பது, தேசப்பற்றை ஊட்டுவது, மதமாற்றிகளை ஒழித்துக் கட்டுவது, ஹிந்துக்களை ஒருங்கிணைப்பது, திராவிட பொய்யையும், புனைவையும் தோலுரிப்பது போன்ற வேலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அயராது உழைக்க வேண்டியது கட்டாயம்.
– தமிழக பா.ஜ., செயற்குழு உறுப்பினர் சவுதாமணி
‘ஹிந்துக்களை ஒருங்கிணைப்பது தவிர்த்து, உங்களின் பிற விருப்பங்கள் நிறைவேற வாய்ப்பு உள்ளது…’ என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., செயற்குழு உறுப்பினர் சவுதாமணி அறிக்கை.
பிஜி நாட்டின் மக்கள்தொகை, ஒன்பது லட்சம். எஸ்டோனியா என்றொரு நாட்டில், 13 லட்சம் மக்கள் தான் உள்ளனர். இந்த நாடுகள் எல்லாம் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்றுள்ளன. இந்திய நகரங்களை விட குறைவாக மக்கள்தொகை கொண்ட இந்த நாடுகளுக்கு கிடைக்கும் தங்கம் நமக்கு ஏன் கிடைக்க மாட்டேன் என்கிறது?
– அரசியல் விமர்சகர் சுமந்த் ராமன்
‘அந்த நாடுகளில், இளைஞர்கள் படிப்பு, விளையாட்டு என பக்குவமாக உள்ளனர். ‘ஜிந்தாபாத்’ கிடையாது; மொபைல் போனை நோண்டிக் கொண்டிருக்க மாட்டார்கள்; அரசியல் கட்சிகள் பின்னால் போக மாட்டார்கள்…’ என, உண்மையை கூறத் தோன்றும் வகையில், அரசியல் விமர்சகர் சுமந்த் ராமன் அறிக்கை.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2813415