
சென்னை: பொதுப்பணித் துறையில், கோவை மண்டல தலைமை பொறியாளர் பதவியை உருவாக்க, அரசு அனுமதி வழங்கவுள்ளது.
பொதுப்பணித் துறையில் கட்டடங்கள், நீர்வளம் என, இரண்டு முக்கிய பிரிவுகள் இருந்தன. நீர்வளப் பிரிவிற்கு, சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய, நான்கு மண்டல தலைமை பொறியாளர்கள் இருந்தனர். கட்டடங்கள் பிரிவிற்கு, சென்னை, மதுரை, திருச்சி ஆகிய, மூன்று மண்டலங்கள் மட்டுமே இருந்தது.புதிதாக பொறுப்பேற்ற தி.மு.க., அரசு, நீர்வளத்துறையை உருவாக்கியுள்ளது. பொதுப்பணித் துறைக்கு அமைச்சராக வேலு, நீர்வளத் துறைக்கு துரைமுருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.நீர்வளத் துறையை போல நிர்வாக வசதிக்காகவும், பணிகளை மேற்கொள்ளவும், கோவை மண்டலத்தை புதிதாக உருவாக்கி, தலைமை பொறியாளரை நியமனம் செய்யவும், முடிவு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில், பொதுப்பணித் துறை தொடர்பான ஆய்வு கூட்டம், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. அப்போது, அமைச்சர் வேலு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. பரிசீலித்து நடவடிக்கை எடுக்க, முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார். எனவே, விரைவில் பொதுப்பணித் துறையில், கோவை மண்டல தலைமை பொறியாளர் பதவி உருவாக்கப்பட உள்ளது. இதற்காக, திருச்சி மண்டலம் இரண்டாக பிரிக்கப்பட உள்ளது.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2804552