
சென்னை : ”மக்கள் நலன் கருதி மதுக்கடைகளை, பகுதி அளவில் அரசு மூட வேண்டும்; அப்படி செய்தால், ஒரு நாள் மதுவிலக்கு அமலாகும்,” என, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் தெரிவித்தார்.
சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி என்.கிருபாகரன், பணியில் இருந்து இன்று ஓய்வு பெறுகிறார். அதையொட்டி, உயர் நீதிமன்ற வளாகத்தில், நேற்று பணி ஓய்வு பாராட்டு விழா நடந்தது. தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், பிரிவு உபச்சார உரை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சியில், நீதிபதி என்.கிருபாகரன் ஆற்றிய பதிலுரை: நான், ஒரு போதும் என்னை நீதிபதியாக நினைத்துக் கொண்டதில்லை; சாதாரண நபராகவே இருந்தேன். என்னுடைய வளர்ச்சி மற்றும் இக்கட்டான சமயங்களில், நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.சத்யநாராயணன் இருவரும், முக்கிய உந்துதலாக இருந்தனர்.வழக்கறிஞர் மற்றும் நீதிமன்றத்தின் மேன்மை காக்கப்படவில்லை எனில், மக்கள் நம்பிக்கை இழந்து விடுவர்.
சுதந்திர போராட்ட காலத்தில் பங்கேற்ற வழக்கறிஞர்கள் மேன்மையை, மீண்டும் கொண்டு வர வேண்டும்.சென்னையில், 125 வயது உடைய உயர்நீதிமன்ற கட்டடத்தில், நீதிபதியாக பணியாற்றியது பெருமையாக உள்ளது. இளம் வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் தொழிலின் புனிதத்தை மீட்டெடுக்க வேண்டும். ஒவ்வொரு வழக்கறிஞரும், ஒரு மூத்த வழக்கறிஞரிடம், மூன்று அல்லது ஐந்து ஆண்டுகள் வரை பயிற்சி எடுக்க வேண்டும்.

அவ்வாறு வருவோரை, தன் குழந்தையை போல நினைத்து, சிறப்பான வழக்கறிஞரை, மூத்த வழக்கறிஞர்கள் உருவாக்க வேண்டும்.வழக்குகளில் மனசாட்சிப்படி தீர்ப்பளித்தேன். நீதிமன்ற உத்தரவுகளை, ‘பிரேக்கிங் நியூஸ்’ வாயிலாக, மக்களிடம் சரியான தகவலை கொண்டு சென்று, பயிற்றுவித்த ஊடகங்களுக்கு நன்றி.நீதிபதியாக பணி ஓய்வு பெறுவது திருப்தியாக இருந்தாலும், வழக்கறிஞர் தொழிலை முறைப்படுத்த முடியாதது, டாஸ்மாக் கடைகளை மூட முடியாமல் போனது, நிறைவை அளிக்கவில்லை.
மக்கள் நலன் கருதி, மதுக்கடைகளை பகுதி அளவில் அரசு மூட வேண்டும்; அதன் வாயிலாக, ஒரு நாள் மதுவிலக்கு அமலாகும்.டில்லியும், மும்பையும் மட்டுமே, உச்ச நீதிமன்றத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன. மண்டல வாரியான கிளைகளை அமைப்பது குறித்து, உச்ச நீதிமன்றம் மீண்டும் பரிசீலிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
விழா நிறைவில், உயர் நீதிமன்றம் சார்பில், நீதிபதி கிருபாகரனுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. உயர் நீதிமன்ற நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2827020