
சென்னை : வாடகை வீட்டில் வசிப்போர், முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில் வீடு கேட்டு மனு கொடுத்தால், இலவச வீடு வழங்கப்படுவதாக பரவிய வதந்தியை நம்பி, நுாற்றுக்கணக்கானோர் மனு கொடுக்க, நேற்று தலைமை செயலகத்தில் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
‘சென்னையில், வீடு இல்லாதவர்களுக்கு, அரசு தரப்பில் வீடு வழங்கப்பட உள்ளது. முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில் வீடு கோரி மனு கொடுப்போருக்கு, 100 நாட்களுக்குள் வீடு வழங்கப்படும்’ என, நேற்று நகரின் பல்வேறு பகுதிகளிலும் வதந்தி பரவியது. அதை நம்பிய அப்பாவி மக்கள், வடசென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து நுாற்றுக்கணக்கான முதியோர், பெண்கள், கைக்குழந்தைகளுடன், தலைமை செயலகத்தில் உள்ள முதல்வர் தனிப்பிரிவில் மனு கொடுக்க குவிந்தனர்.

கலைவாணர் அரங்கில், நேற்று சட்டசபை கூட்டம் நடந்ததால், போலீசார் அங்கு பாதுகாப்பு பணிக்கு சென்றிருந்தனர். திடீரென ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால், தலைமை செயலகத்தில் இருந்த ஒரு சில போலீசாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. மக்கள் ஒருவரை ஒருவர் முந்தி செல்ல முயன்றதால், கடும் நெரிசல் ஏற்பட்டது. முதியோரும், கைக்குழந்தையுடன் வந்த பெண்களும் நெரிசலில் சிக்கி தவித்தனர். உடனடியாக, கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் மக்களை வரிசைப்படுத்த முயன்றனர். அப்போது ஏற்பட்ட நெரிசலில், அங்கிருந்த கண்காணிப்பு கேமரா துாண் சரிந்து விழுந்து, மூதாட்டி ஒருவர் காயமடைந்தார்.போலீசார் சிரமப்பட்டு, அனைவரையும் வரிசைப்படுத்தி, குறிப்பிட்ட நபர்களாக பிரித்து, மனு கொடுக்க உள்ளே அனுப்பி வைத்தனர். வதந்தி பரப்பிய நபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2826860