
சென்னை-குறிப்பிட்ட சமூகத்தினர் பற்றி அவதுாறாக பேசி, ‘வீடியோ’ வெளியிட்டு கைதான நடிகை மீரா மிதுன் சிறையில் அடைக்கப்பட்டார். மீரா மிதுனுக்கு உறுதுணையாக இருந்த, அவரது காதலனையும், மத்திய குற்றப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.
வீடியோ
சென்னை சேத்துப்பட்டை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி என்ற மீரா மிதுன், 34; மாடல் அழகி. இவர், சூர்யா நடிப்பில் வெளிவந்த தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார்.சமீபத்தில், பட்டியல் இனத்தை சேர்ந்த குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் பற்றி அவதுாறாக பேசி, டுவிட்டரில் வீடியோ வெளியிட்டு இருந்தார். இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வி.சி., கட்சியை சேர்ந்த வன்னியரசு, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், மீரா மிதுன் மீது, எஸ்.சி., – எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட, ஏழு பிரிவுகளில் வழக்கு பதிந்து, விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, ‘சம்மன்’ அனுப்பினர்.ஆனால், மீரா மிதுன் காதலனுடன் தலைமறைவானார். கேரள மாநிலம் ஆலப்புழாவில் பண்ணை வீட்டில் பதுங்கி இருந்த மீரா மிதுனை மத்திய குற்றப்பிரிவு போலீசார், நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரை சென்னைக்கு அழைத்து வந்து, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விசாரித்தனர். அப்போது, ‘என் வழக்கறிஞர் வந்தால் தான் பேசுவேன்’ என, அவர் அடம் பிடித்தார். போலீசுக்கு எதிராக சத்தமாக பேசி கூச்சலிட்டார்.

விசாரணை
போலீசார் நேற்று இவரை, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 27ம் தேதி வரை நீதிமன்ற காவலில், புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், மீரா மிதுன் அவதுாறு வீடியோ வெளியிட உறுதுணையாக இருந்த, சென்னை அம்பத்துாரை சேர்ந்த, இவரது காதலன் ஷாம் அபிஷேக், 26, என்பவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2824331