
சென்னையில் 2-வது விமான நிலையம் எப்போது அமைக்கப்படும் என்று மக்களவையில், அதிமுக எம்.பி. ஓ.பி. ரவீந்திரநாத் கேள்வி எழுப்பியதை தொடர்ந்து, தமிழக அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் ஆகிய 2 இடங்களை தெரிவு செய்ததாகவும், ஆனால் அதில் ஒன்றைகூட இதுவரை இறுதி செய்யவில்லை என்றும் விமானப் போக்குவரத்து இணையமைச்சர் வி.கே.சிங் மக்களவையில் பதிலளித்தார். இந்நிலையில், ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள அண்ணா மற்றும் காமராஜர் முனையங்களை 2 ஆயிரத்து 467 கோடி செலவில் விரிவாக்கம் செய்ய பணிகள் தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இன்று முதல் மக்களைத் தேடி மருத்துவம்
இன்று காலை 10 மணியளவில்தலைமைச் செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். வீடு தேடி வாகனம் மூலம் மருத்துவ சேவை அளிக்க உள்ள இத்திட்டத்தின் தொடக்க விழாவில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், துறையின் முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
டோக்கியோ ஒலிம்பிக்: பாட்மிண்டன் முதல் சுற்றில் பிவி சிந்து வெற்றி
டோக்யோ ஒலிம்பிக்கின் பாட்மிண்டன் மகளிர் பிரிவில் இஸ்ரேலின் போலிகர்போவை முதல் சுற்றில் எதிர்கொண்டார் இந்திய வீராங்கனை பிவி சிந்து. தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடிய சிந்து, முதல் செட்டை 21-7 என்ற கணக்கிலும், இரண்டாவது செட்டை 21-10 என்ற கணக்கிலும் வென்று போலிகர்போவை வென்று அடுத்த சுற்றுக்கு தகுதிப் பெற்றார். மேலும், பெண்களுக்கான துப்பாக்கிச்சுடுதல்,10 மீ ஏர் பிஸ்டல் பிரிவு தகுதிச்சுற்றில் இந்தியா தோல்வி அடைந்தது.