
ஜம்மு காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தியை கொலை செய்ய முயற்சி நடக்கிறதா என்று மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாள்கள் ஜம்மு காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இப்பயணத்தின்போது கட்சித் தலைவர் ஒருவரின் மகன் திருமணத்திலும் கலந்து கொண்டார். இது தவிர இரண்டு கோயில்களுக்கும் ராகுல் காந்தி சென்றார். ஸ்ரீநகரில் ராகுல் காந்தி திருமணத்தில் கலந்து கொண்டு சென்ற பிறகு அருகில் தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பொதுமக்கள் 10 பேர் காயம் அடைந்தனர். உடனடியாக அப்பகுதியில் போலீஸார் ரெய்டு நடத்தி வெடிகுண்டுகளுடன் பத்திரிகையாளர் ஒருவரைக் கைது செய்தனர். இந்த வெடிகுண்டு தாக்குதல் குறித்து மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா பட்டோலே கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீருக்கு வந்த நேரத்தில் வெடிகுண்டு நடத்தப்பட்டு இருப்பதை மத்திய அரசு தடுக்கத் தவறிவிட்டது. இந்த வெடிகுண்டு தாக்குதல் ராகுல் காந்தியை கொலை செய்ய நடந்த சதியா? என்று நினைக்க தோன்றுகிறது. ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீருக்கு சென்றபோது அவர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இடத்திற்கு அருகில் வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்ற பிறகு இத்தாக்குதல் நடந்துள்ளது. அதுவும் ராகுல் காந்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இடத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. நாட்டிற்காக காந்தி குடும்பத்தில் இரண்டு பேர் தங்களது உயிரைத் தியாகம் செய்துள்ளனர். இப்போது நாட்டின் நன்மைக்காக பாடுபட்டு வரும் ராகுல் காந்தியையும் கொலை செய்ய சதி நடக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்றும் நானா பட்டோலே தெரிவித்தார். இதற்கிடையே மகாராஷ்டிரா அரசு ராஜீவ் காந்தி பெயரில் மகாராஷ்டிரா அரசு ஐடி பிரிவில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. ராஜீவ் காந்தி பெயரில் வழங்கப்பட்ட கேல்ரத்னா விருதை பிரதமர் மோடி வேறு பெயரில் மாற்றிவிட்ட நிலையில் மகாராஷ்டிரா அரசு இம்முடிவை எடுத்துள்ளது.