
காங்கிரஸ் எம்.பி., ராகுலின் பிரதமர் கனவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா குறுக்கே நிற்பதால், அவரை ஓரங்கட்டும் முயற்சியில் ராகுல் இறங்கி இருப்பதாக டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வரும் 2024 லோக்சபா தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் பா.ஜ.,வுக்கு எதிராக ஓரணி யில் திரட்டும் முயற்சியில் மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி ஈடுபட்டுள்ளார்.இதையொட்டி ஐந்து நாள் பயணமாக சமீபத்தில் டில்லிக்கு வந்தார். அப்போது காங்., தலைவர் சோனியா மற்றும் ராகுலை சந்தித்து பேசினார்.எதிர்க்கட்சியான காங்.,கின் செயல்பாடு மேலும் வலுவாக இருக்க வேண்டும் என்றும், எதிர்க்கட்சிகளுடன் ஒன்று சேர்ந்து செயல்படும்படியும் சோனியாவிடம் அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
மம்தா சந்திப்பை தொடர்ந்தே, எதிர்க்கட்சி தலைவர்களுடனான காலை உணவு சந்திப்பு கூட்டத்திற்கு ராகுல் ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது.மேலும், ‘பா.ஜ.,வுக்கு எதிராக அணி திரட்டும் முயற்சி காங்., வாயிலாக நடக்க வேண்டும்’ என, ராகுல் நினைப்பதாக கூறப்படுகிறது. எனவே தான் மம்தாவின் முயற்சியில் அவர் அதிகம் ஆர்வம் காட்டாமல் விலகி நிற்பதாகவும் தெரிகிறது.

இதற்கிடையே எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் மம்தாவின் முயற்சி, ராகுலின் பிரதமர்கனவுக்கு இடையூறு விளைவிப்பதாகவும் பார்க்கப்படுகிறது.எனவே மம்தாவை எரிச்சல் அடையச் செய்ய, மார்க்சிஸ்ட் கம்யூ.,வுடன் காங்., நெருக்கம் காட்ட துவங்கி உள்ளதாக டில்லி வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2824136