
சென்னை: சுதந்திரதின நாளில் சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியேற்றி முதல்வர் ஸ்டாலின் உரையாற்றியதாவது;
புதிய வாய்ப்பு
எனக்கு முதன்முறையாக கோட்டையில் கொடியேற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்கு மக்களுக்கு நன்றி. ஆக. 15ல் முதல்வரும், ஜனவரி 26ல் கவர்னரும் கொடியேற்றலாம் என்ற எண்ணத்தை எடுத்து வைத்தவர் கருணாநிதி. முதல்வராக முதன் முதலாக கொடியேற்றி வைத்தவர் கருணாநிதி. அவர் சுதந்திர சிந்தனையாளர். கார்கில் போரின்போது நிதி திரட்டி வழங்கியவர் கருணாநிதி.

மக்களுக்காக உழைத்தேன்
இந்திய சுதந்திர விழாவை கொண்டாடும் இந்த ஆண்டில் தமிழக சட்டசபை நூற்றாண்டு விழாவை ஜனாதிபதி தலைமையில் நடத்தினோம். மகாத்மா காந்தி மதுரைக்கு வந்த போது அரை ஆடையை உடுத்த துவங்கியதும் இந்த ஆண்டு. வஉசியின் 150வது பிறந்த நாள் கொண்டாடுவதும் இந்த ஆண்டு. மகாகவி பாரதியார் நூற்றாண்டு விழா நடக்கிறது. நமது அரசு 6வது முறை ஆட்சியில் அமர்ந்துள்ளோம். மக்களுக்காக நான் உழைத்தேன் மக்கள் என்னை முதல்வராக்கினர்.
மறக்க முடியாது
150 ஆண்டுகளுக்கு முன்னே விடுதலைக்காக போராடியது தமிழ் மண். வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமத்துரை , வேலுநாச்சியார், வ.உசி., திருவிக , பெரியார், பாரதிதாசன், பசும்பொன் முத்துராமலிங்கதேவர். ம.பொ.சி, உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கெடுத்துள்ளனர். இவர்களின் வீரமும், தியாகமும் என்றும் மறக்க முடியாதவை. வ.உ.சி., யின் 150வது பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்.
உதவித்தொகை உயர்வு
நினைவுத்தூண்கள் கல்லால், மண்ணால் உருவானது அல்ல. ரத்தத்தினாலும், தியாகத்தினாலும் உருவானது. தியாகிகளின் உதவித்தொகை ரூ. 17 ஆயிரத்தில் இருந்து ரூ. 18 ஆயிரமாக உயர்த்தப்படும். தியாகிகளின் குடும்ப ஓய்வூதியம் உயர்த்தப்படும். மதுரை காந்தி அருங்காட்சியகம் ரூ.6 கோடி செலவில் புதுப்பிக்கப்படும்.
திட்டங்கள்
மருத்துவ நெருக்கடி, பொருளாதார நெருக்கடி இடையில் மக்கள் தவித்தனர். கோவிட் பாதிப்பில் இருந்து மீட்க போராடிய அனைவரையும் பாராட்டுகிறேன். தமிழக நிதி நிலை சுமையான நேரத்தில் பொறுப்பேற்ற திமுக அரசு மக்களை காப்பாற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். மக்களுக்கு நிவாரணமாக ரூ. 4 ஆயிரம் வழங்கினோம். பால் விலை குறைப்பு, பெட்ரோல் விலை குறைப்பு, பஸ்களில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம், அன்னை தமிழில் அர்ச்சனை, அனைவரும் அர்ச்சகராகும் திட்டம், சங்கரய்யாவுக்கு விருது ஆகிய திட்டங்களை நிறைவேற்றியதுடன், 3 கோடி மக்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தி உள்ளோம்.
பாடுபடுவோம்
உலகத்தரத்தில் புதிய பன்னோக்கு மருத்துவமனை அமைக்கப்படுகிறது. மக்களை தேடி மருத்துவம் என திட்டம் துவக்கி உள்ளோம். சமூகம், அறிவியல் , பொருளாதாரம் ஆகியவற்றில் வளர்ச்சி பெற வேண்டும். பல்வேறு திட்டங்களை உருவாக்கி உள்ளோம். தமிழகம் முன்னேற இன்னும் தொடர்ந்து பாடுபடுவோம். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
விருது
விழா முடிவில் வீர தீர செயல்களுக்கான விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
பேராசிரியர் லட்சுமணன்– கலாம் விருதுகோவிட்டால் உயிரிழந்த டாக்டர் சண்முகப்பிரியா- கல்பனா சாவ்லா விருதுஜே.பார்த்திபன்- நல் ஆளுமை விருது
கோவிட் மருத்துவர் நாராயணசாமி- நல் ஆளுமை விருது
டாக்டர் சாந்தி துரைசாமி- அவ்வையார் விருது
உதகை- சிறந்த நகராட்சி விருது
மரியஅலாசியஸ் – சமூக தொண்டு
டாக்டர் ஆதித்யா- கோவிட் தடுப்பு சிறப்பு பணி.
திறப்பு
பின்னர் சுதந்திர தின நினைவு தூணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2823724