
புதுடில்லி-கொரோனா வைரசை எதிர்கொள்ள அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கொரோனா அவசர கால நிதி தொகுப்பில் இருந்து, 1,828 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்து உள்ளது.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று தன், ‘டுவிட்டர்’ பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:கொரோனா வைரஸ் பரவலை எதிர்கொள்ள, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. மாநிலங்களுக்கு உதவும் வகையில் கொரோனா அவசரகால நிதி தொகுப்பின்கீழ் ஒதுக்கப்பட்ட, 12 ஆயிரத்து, 185 கோடி ரூபாயில் இருந்து முதற்கட்டமாக, 15 சதவீதம் தொகை மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்காக விடுவிக்கப்படுகிறது.

இதன்படி, 1,827.80 கோடி ரூபாய் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இந்த நிதி நாட்டில் மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உதவியாக இருக்கும்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2814113