இறைச் சாந்நித்தியம், சரித்திரச் சிறப்பு, வழிபாட்டு பலன்கள் ஆகியவற்றை ஒருங்கே அருளும் மிக அற்புதமான ஊர் ஒன்று உண்டு. விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அருகிலுள்ள சிந்தாமணிநல்லூர்தான் அது.
இங்குதான் சுமார் 900 வருடங்கள் பழைமை யான அருள்மிகு வைத்தீஸ்வரர் கோயில் அமைந்திருக்கிறது. அம்பாளின் திருநாமம் தையல் நாயகி. ஆமாம்… சிதம்பரம் அருகிலுள்ள வைத்தீஸ்வரன்கோவிலுக்குச் செல்ல இயலாத வர்கள் இந்தத் தலத்துக்குச் சென்று வழிபட்டு வரம் பெறலாம்.
விக்கிரமச் சோழன் காலத்துக் கோயில், குழந்தை வரம் மற்றும் கல்யாண வரம் அருளும் ஆலயம், பஞ்சபூதேஸ்வரர் தரிசனம் கிடைக்கும் க்ஷேத்திரம்… இப்படியான சிறப்புகளைத் தன்னகத்தே கொண்ட சிந்தாமணிநல்லூர் தலத்தைத் தரிசிக்க, ஒரு குருவாரம் – வியாழக் கிழமை அன்று காலையிலேயே புறப்பட்டு சிந்தாமணி நல்லூரை அடைந்தோம்.
மனத்தை மயக்கும் ரம்மியமான இயற்கைச் சூழலலோடு திகழ்கிறது சிந்தாமணி நல்லூர். ஊரின் தொடக்கத்திலேயே ஆலயம் அமைந்துள்ளது. வரலாற்றுச் சிறப்பு பற்றிய குறிப்புகளுடன் அமைக்கப்பட்டிருக்கும் ஊரின் தோரண வளைவு நம்மை வரவேற் கிறது. அங்கிருந்து நடந்து செல்லும் தொலைவிலேயே ஆலயம் உள்ளது.
வேண்டும் வரம் கிடைக்கும்
சோழன் காலத்தைச் சேர்ந்த இந்த ஆலயம் தற்போதும் சிறப்பாகப் பராமரிக் கப்பட்டு வருகிறது. கிழக்கு நோக்கியுள்ள ஆலயத்துக்கு ராஜகோபுரம் இல்லை. கருங்கல் வேலைப்பாடு. வெளிப்புறச் சுவர்களில், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிற்பங்களின் கலைநயம் நம்மை வியக்க வைக்கிறது.
ஆலயப் பிராகாரத்தில் தெற்குச் சுற்றில் பிச்சாடனர், நர்த்தன விநாயகர், ஊர்த்தவதாண்டவர், தட்சணாமூர்த்தி ஆகியோர் அருள் கிறார்கள். மேற்குப் பிராகாரத்தில் லிங்கோத்ப வரும்; தனிச் சந்நிதியில் சண்டிகேஸ்வரரும் அருள்பாலிக்கிறார்கள்.
வடக்குச் சுற்றில் பிரம்மா, மணக் கோலம் காட்டும் சிவன் – பார்வதி, துர்கை, கால பைரவர் அருள்கின்றனர்; பிரசன்ன பக்த ஆஞ்சநேயர் நவகிரகங்கள் சந்நிதியும் அமைந்துள்ளன. சுற்றுக் கோயில்களாக விநாயகர், முருகன், சூரியன், செவ்வாய் சித்திர – விசித்திர குப்தர் ஆகியோரின் சந்நிதிகள் திகழ்கின்றன. தல விருட்சமாக மகிழ மரம் உள்ளது. கருவறையில் லிங்கத் திருமேனியராக எழில்கோலம் காட்டுகிறார் அருள்மிகு வைத்தீஸ்வரர். அம்பாள் தையல் நாயகியும் தனிச் சந்நிதியில் அருள்கிறாள். `இருவருமே வேண்டும் வரம் தரும் வரப்பிரசாதியர்’ என்கிறார்கள் பக்தர்கள்.





மூலவரான வைத்தீஸ்வரரை நேரில் வந்து மனமுருகி வழிபட்டுச் சென்றால், அனைத்து வகையான பிணிகளும் தீரும் என்கிறார்கள். மகாளய அமாவாசை அன்று தையல்நாயகிக்கு அன்னாபிஷேகம் நடைபெறும். அன்று பெண்கள் வந்து வழிபட்டால், குடும்பத்தில் சகல சௌபாக்கியமும் உண்டாகும். திருமணம் ஆகாத பெண்களுக் குத் திருமண பாக்கியம் கைகூடும்.

தினச் சிந்தாமணி நல்லூர்
1127-ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த ஆலயத்தை விக்கிரமச் சோழன் நிர்மாணித்துள்ளான். அக்காலத்தில் `கயிலாச குலோத்துங்க சோழீஸ்வர முடைய மகாதேவர்’ என்ற திருப்பெயரில் வணங்கப் பட்டுள்ளார் இந்த இறைவன். விக்கிரமச் சோழனின் தந்தை குலோத்துங்கனின் பெயரால் இந்தத் தலத்தை விக்கிரமச் சோழன் நிர்மாணித்துள்ளான் என்பதை அறிய முடிகிறது.
அதேபோல், தன்னுடைய தாயார் மதுராந்தகி (எ) தினசிந்தா மணியின் நினைவாக, இந்த ஊருக்கு ‘தினசிந்தாமணி நல்லூர்’ எனும் திருப்பெயரைச் சூட்டியிருக்கிறான். அதுவே காலப்போக்கில் சிந்தாமணிநல்லூர் என்றாகி விட்டதுபோலும். கோயிலின் ரமேஷ் சிவாசார்யரிடம் பேசினோம்.
வில்வ மரத்தில் தொட்டில் கட்டினால்…
“இந்த ஆலயம் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ளது. தொடர்ந்து ஒரு கால பூஜை நடைபெற்று வருகிறது.
தைப்பூசம், பிரதோஷம், பௌர்ணமி, துர்கை பூஜை, தேய்பிறை அஷ்டமி, குரு பூஜை, முருகனுக்குக் கிருத்திகை வழிபாடு, நவகிரக வழிபாடு, ஆருத்ரா வழிபாடு, ஆஞ்சநேயர் ஜயந்தி, மாசி மகா சிவராத்திரி ஆகியவை சிறப்புற நடைபெறுகின்றன. தற்போது, பெருந்தொற்றுக் கட்டுப்பாடுகள் காரணமாக உரிய விதிமுறைகளைப் பின்பற்றி, பக்தர்கள் இல்லாமல் பூஜைகளை நடத்தி வருகிறோம்.
பௌர்ணமி, அமாவாசை ஆகிய நாள்களில் இந்த ஆலயத்தில் தங்கிச் சென்றால் நினைத்த காரியம் கைகூடும். இந்தத் திருக்கோயிலில் உள்ள நர்த்தன விநாயகரை வழிபட்டால் கல்யாணம் சீக்கிரம் கைகூ டும். கோயிலின் வில்வ மரத்தில் தொட்டில் கட்டி, அம்பாளையும் மூலவரையும் வழிபட்டுச் சென்றால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
தைப்பூசத்துக்கு மறுநாள் இங்கே நடைபெறும் இடும்பன் பூஜை பிரசித்திபெற்றது. இந்தப் பூஜையில் படைக்கப்படும் உணவை குழந்தை வரம் அருளும் மாமருந்தாகக் கருதுகிறார்கள் பக்தர்கள். கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு, மண்டியிட்டு இந்தப் பிரசாதத்தைச் சாப்பிட்டால், குழந்தை வரம் நிச்சயம் கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. சித்திர- விசித்திர குப்தர்களுக்குப் பெளர்ணமி பூஜை நடைபெறுகிறது. அப்போது இங்கு வந்து வழிபட்டால் எம பயம் நீங்கும்; ஆயுள் பலம் பெருகும்’’ என்கிறார்.


நாக தோஷப் பரிகாரத் தலமாகவும் இந்தக் கோயில் திகழ்கிறது. தை மாதம் முதல் வாரம் ஏதேனும் இரண்டு நாள்களில் காலை 6 முதல் 7 மணிக்குள் சூரியன் தன் கிரணங்களால் இறைவனைப் பூஜிப்பது வழக்கமாம். ஆனால், தற்போது ஆலயத்தின் எதிரே மரம் வளர்ந்து கிளை விரித்து நிற்பதால், சூரியக் கதிர்கள் இறைவனை தரிசிப்பத்தை காண முடியவில்லை என்கிறார்கள்.
எப்படிச் செல்வது?: விழுப்புரம் – திண்டிவனம் தேசிய நெடுஞ் சாலையில் விழுப்புரத்திலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில், முண்டியம் பாக்கத்தை அடுத்து உள்ளது சிந்தாமணிநல்லூர்.

அதிர்வுகள் மிகுந்த சமண சித்தர் ஜீவசமாதி!
இந்தத் தலம் குறித்து சேரமான் பெருமான், ‘பொன்வந்தி அந்தாதி’யில் பாடல் பாடியுள்ளார். சித்தர் ஒருவரின் ஜீவ சமாதியும் இங்கு அமைந்துள்ளது. அவரை, ‘சமண சித்தர்’ என்று சிலர் கூறுகிறார்கள். சரியான பெயர் என்னவென்று அறிய முடியவில்லை.
அந்த இடத்தில் ஐந்து முகம் கொண்ட லிங்கம் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அந்த சுவாமிக்கு பஞ்ச பூதீஸ்வரர் என்று திருப்பெயர். குறிப்பிட்ட இந்த இடத்தில் தியானம் செய்தால், தெய்வ சாந்நித்தியத்தையும் நல்ல அதிர்வு களையும் உணர முடியும் என்கிறார்கள் பக்தர்கள்.
முற்காலத்தில் திருவிழாவின்போது இந்தப் பகுதியைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர், கொற்கூலி, காலளவு, அங்காடிப்பாட்டம் போன்ற வரிகளைக் கொடுத்துள்ளனர். இந்தத் தகவல்களை, ஆலயக் கல்வெட்டுகள் தாங்கி நிற்கின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள்.
Source: https://www.vikatan.com/spiritual/temples/vizhuppuram-sinthamaninalloor-vaitheeswaran-temple