
மதுரை : கொரோனா ஊரடங்கு தளர்வில் பள்ளி, கல்லுாரிகள், தியேட்டர்கள் திறக்க அனுமதிக்கப்பட்ட நிலையில், வெள்ளி, சனி, ஞாயிறு மட்டும் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையை அரசு நீக்க வேண்டும் என ஹிந்து அமைப்புகள் வலியுறுத்துகின்றன.
கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் குறைய துவங்கியதும் தளர்வுகள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதன்படி ஜூலை 5 முதல் கோயில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். சனி, ஞாயிறு பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. தவிர, ஆடி பிறப்பையொட்டி வெள்ளி கிழமைகளில் அம்மன் கோயில்களில் பெண்கள் கூட்டம் அலைமோதியது. இதைத்தொடர்ந்து அனைத்து வழிபாட்டு தலங்களில் ஆக.,6 முதல் வெள்ளி, சனி, ஞாயிறு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதன்காரணமாக நேற்றுமுன்தினம் கோயில்களின் வாசலில் எண்ணற்ற திருமணங்கள் நடந்தன.

நேற்று அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வில் பள்ளி, கல்லுாரிகள், தியேட்டர்கள் திறக்கப்படும் என்றும், கடற்கரைகளில் மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அரசு அறிவித்துள்ளது. ஆனால், வழிபாட்டு தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிறு தடை நீக்கம் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.

ஒருதலைபட்சமான முடிவு
ஹிந்து மக்கள் கட்சித்தலைவர் தலைவர் அர்ஜூன்சம்பத் கூறியதாவது: கோயில் விஷயங்களில் தி.மு.க., அரசு ஒருதலைபட்சமாகவே நடந்து வருகிறது. ஹிந்துகள் மனம் சங்கடப்படுத்தும்விதமாக கிரிவலம் ரத்து உள்ளிட்ட முக்கிய திருவிழாக்களை நடத்த அனுமதிக்கவில்லை. அதேசமயம் சர்ச் கொடியேற்றம் உள்ளிட்ட விழாக்களுக்கு கலெக்டரே நேரில் சென்று அனுமதி தருகிறார். இது எந்த வகையில் நியாயம். உரிய வழிகாட்டி முறைகளை பின்பற்றி எல்லா நாட்களும் கோயில்களை திறக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்றார்.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2828405