
தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் தமிழ்முறைப்படி அர்ச்சனை நடைபெறும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பின் படி முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள 47 கோயில்களில், ‘அன்னை தமிழில் அர்ச்சனை’ என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதேபோல் தஞ்சாவூர் பெரிய கோயிலிலும் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. பெருவுடையார் சந்நிதியில் சிறப்பு பூஜைகள் செய்து தீபம் ஏற்றி தமிழ் முறைப்படி அர்ச்சனைகள் செய்யப்பட்டன. பெருவுடையார் சந்நிதியில் ஒலிக்கும் தமிழ் எனப் பரவசமடைந்த பக்தர்கள் மெய்சிலிர்க்க சுவாமி தரிசனம் செய்தனர்.

இது குறித்து சிலரிடம் பேசினோம். “மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட பெரிய கோயில் உலகப் புகழ் பெற்று விளங்கி வருகிறது. தமிழர்களின் வரலாறு, பண்பாடு, சிறப்புகள், திறமை ஆகியவற்றிற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இன்றைக்கும் விளங்கி வருகிறது. பெரியகோயிலுக்கு வரும் பக்தர்கள் பலரும் இங்கு தமிழில் அர்ச்சனை செய்யப்பட வேண்டும் என விரும்பினர். அனைவரது எதிர்பார்ப்பும் அதுவாகவே இருந்தது.
அத்துடன் பெரிய கோயில் குடமுழுக்கு நடைபெற்றபோது தமிழ் முறைப்படி நடத்த வேண்டும் எனக் கடந்த காலங்களில் அழுத்தமான கோரிக்கைகள் எழுந்தன. இதற்காக பல போராட்டங்கள் நடைபெற்றன. அதன் படி கடந்த குடமுழுக்கின் போது நீதிமன்ற உத்தரவுப்படி தமிழிலும், சமஸ்கிருதத்திலும் குடமுழுக்கு மந்திரங்கள் ஓதப்பட்டன. அப்போதே தமிழ் ஆர்வலர்கள் பலரும் எல்லையில்லா மகிழ்ச்சியடைந்தனர். மேலும் தமிழில் அர்ச்சனை செய்யப்படுவது எப்போதும் தொடர வேண்டும் என விரும்பினர்.

இந்நிலையில் அனைத்து கோயில்களிலும் தமிழ் மொழியில் மந்திரங்கள் முழங்க வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கை எழுந்து வந்தது. இதையடுத்து தமிழக அரசு பல்வேறு கோயில்களில் தமிழ் முறைப்படி அர்ச்சனை நடைபெறும் என அறிவித்தது. அதன்படி பெரிய கோயிலில் உள்ள பெருவுடையாருக்கு தமிழ் முறைப்படி அர்ச்சனை செய்யப்பட்டது. இதனால் பக்தர்கள் அனைவரும் எல்லையில்லா மகிழ்ச்சியடைந்தனர். பெரியகோயில் பெருவுடையார் சந்நிதியில் தமிழ் ஒலிக்க வேண்டும் என்பது எல்லோருடைய நீண்ட நாள் ஆசை. அது தற்போது கைகூடியிருப்பதுடன் தமிழ் ஒலிக்கத் தொடங்கிவிட்டது” என்றனர்.
Source: https://www.vikatan.com/spiritual/news/thanjavur-periya-kovil-started-chanting-the-mantras-in-tamil