
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக, புகழ்பெற்ற கோவில்களில் மக்கள் கூடுவதை தடுக்க, அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் தடை உத்தரவு பிறப்பித்துள்ளன.
மதுரையில் மூன்றாம் அலை பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில், மீனாட்சியம்மன் ஆலயம், கள்ளழகர் கோயில், கூடலழகர் பெருமாள் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில்களில் வரும் இரண்டாம் தேதி முதல் எட்டாம் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் ஆடி கிருத்திகை அன்று கோயில் நிகழ்வுகளில், அர்ச்சகர்கள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆடி கிருத்திகையை ஒட்டி, ஆகஸ்டு 2 மற்றும் 3ம் தேதிகளில் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலிலும், மக்கள் கூட்டத்தை தடுக்கும் நோக்கில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஆகஸ்ட் 4ம் தேதி வரை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
திருத்தணி கோயில் சிறப்பு பூஜைகள் இணையதளத்திலும், யூடியுப் சேனலிலும் நேரடியாக மாலை ஐந்து மணி அளவில் ஒளிபரப்பப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை வடபழனி கோயிலில் ஞாயிறு ஒருநாள் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும், அன்று மட்டும் ஆகமவிதிகளின் படி, நான்குகால பூஜைகள் நடத்தப்படும் எனவும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Source: https://tamil.news18.com/news/tamil-nadu/tamil-nadu-government-restricts-devotees-temples-visit-skd-520179.html