
காபூல்: ஆப்கானிஸ்தானில் வங்கியில் இருந்து வாரத்திற்கு 200 டாலருக்கு மேல் பணமாக எடுக்க தடை விதித்து தலிபான்கள் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றியதால், ஏற்கனவே தடுமாற்றத்தில் இருந்த ஆப்கன் பொருளாதாரம் தற்போது பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் ஆப்கனில் அத்தியாவசிய பொருட்களின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. இச்சூழலை சமாளிக்க தலிபான்கள் சில நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன்படி, சென்ட்ரல் பேங்க் ஆப் ஆப்கானிஸ்தான் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது, அனைத்து வங்கிகளிலும் மக்கள் ஒரு வாரத்திற்கு 200 டாலருக்கு மேல் (ஆப்கன் மதிப்பில் 2000 ஏ.எப்.எஸ்) வங்கியில் இருந்து பணமாக எடுக்க தடை விதித்துள்ளது.

மேலும், பொருளாதாரம் மோசமான நிலைக்கு சென்றுள்ளது தற்காலிகமானது என்றும், விரைவில் நிலைமை சரியாகும் எனவும் தனியார் வங்கிகள் அனைத்தும் தங்கள் பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், பணமாக எடுக்க மட்டுமே இப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க டிஜிட்டல் முறையில் பணத்தை அனுப்பிக் கொள்ளலாம் என்றும் இதற்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. தலிபான்கள் காபூலைக் கைப்பற்றியதிலிருந்தே ஆப்கனில் வங்கி சேவைகள் முற்றிலுமாக முடங்கியது குறிப்பிடத்தக்கது.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2833630