
ஆப்கானிஸ்தான் பிரச்னை தொடர்பாக இந்திய ஒன்றிய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் டில்லியில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், ஆப்கன் விவகாரத்தை பயன்படுத்தி இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்தேன்.
– விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்
‘இல்லாத ஒன்றை இருப்பதாக கூறி, ஆப்கன் விவகாரத்திற்கும், இந்திய இஸ்லாமியருக்கும் முடிச்சு போடுவதில் நீங்கள் கெட்டிக்காரராக இருக்கிறீர்களே…’ என, ‘பாராட்டத்’ தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேட்டி.
அ.தி.மு.க., பலவித சோதனைகளை சந்தித்துள்ளது. அதன் பிறகும் வீறு கொண்டு எழுந்து நிற்கும் பலம் வாய்ந்தது. இந்த எண்ணத்துடன் தொடர்ந்து கட்சிப் பணியாற்றுங்கள். தி.மு.க., நிறைவேற்றாத திட்டங்களை மக்களிடம் கூறுங்கள்.
– அ.தி.மு.க., இலக்கிய அணி செயலர் வைகை செல்வன்
‘மூன்று மாதங்கள் கூட ஆகவில்லை. அதற்குள், அ.தி.மு.க.,வினர் சோர்ந்து விட்டனரா…’ என, கேட்கத் தோன்றும் வகையில், அ.தி.மு.க., இலக்கிய அணி செயலர் வைகை செல்வன் பேச்சு.
தமிழகத்தை ஆளும் தி.மு.க., அரசு, வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தது போல, ஆதிதிராவிடருக்கும் தனி பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும். ஆதிதிராவிடர் நிலை குறித்து வெள்ளை அறிக்கையும் வெளியிட வேண்டும்.
– இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன்
‘நீங்கள் இப்படி கேட்டால், பா.ம.க.,வினர் வன்னியருக்கு தனி பட்ஜெட் கேட்பரே…’ என, சொல்லத் தோன்றும் வகையில், இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன் பேட்டி.
மக்கள் செல்வாக்கு உள்ள மூத்த அரசியல் தலைவர்கள் வாழ்ந்த காலத்திலேயே, துணிச்சலாக ஓர் அரசியல் கட்சியை துவக்கி, வெற்றி நடை போட்டவர் விஜயகாந்த். அவரின் உடல் நலக்குறைபாடு நீங்கி, பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
– தமிழக காங்., – எம்.பி., திருநாவுக்கரசர்

‘கட்சியை துவக்கியது எல்லாம் சரி தான். ரொம்ப நாக்கை துருத்தி விட்டாரே…’ என, கவலை தெரிவிக்கத் தோன்றும் வகையில், தமிழக காங்., – எம்.பி., திருநாவுக்கரசர் அறிக்கை.
ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு தடுப்பூசி போட, மத்திய அரசு கூடுதலாக, 17 லட்சம் ‘டோஸ்’ தடுப்பூசிகளை வழங்குகிறது. இவர்கள் அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி போடப்படும்.
– பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம்
‘வழக்கமாக மாணவர்களுக்குத் தான் பள்ளிகளில் தடுப்பூசி போடப்படும். இப்போது ஆசிரியர்களுக்கு போடப்படுகிறது. மாணவர்கள் பார்த்து ரசிப்பர்…’ என, கூறத் துாண்டும் வகையில், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் பேட்டி.
ஆப்கன் விவகாரத்தை பேச, இந்தியர்களுக்கு அருகதை இல்லை. நம் காஷ்மீர் எல்லைக்கு அருகில் உள்ள அந்த நாட்டிலிருந்து அமெரிக்கா வெளியேறியதும், நம் படைகளை அங்கு நிறுத்தி, பாதுகாப்பை உறுதி செய்திருக்க வேண்டாமா. அப்பாவி கோழிக்குஞ்சுகள் போலத் தான் இந்தியர்கள் உள்ளனர்.
– பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியசாமி
‘பிரதமர் மோடி ஏன் நிம்மதியாக இருக்கிறார் என நினைத்து விட்டீர்கள் போலிருக்கிறதே…’ என, கிண்டலாக கூறத் துாண்டும் வகையில், பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியசாமி அறிக்கை.
SOurce: https://www.dinamalar.com/news_detail.asp?id=2832334