
ஆப்கானிஸ்தான் நிலைமையை உன்னிப்பாக கண்காணிக்கிறோம் என்று இந்தியா அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
ஆப்கானிஸ்தானை தங்கள் ஆளுகையின்கீழ் தலீபான் அமைப்பினர் கொண்டு வந்ததை தொடர்ந்து அங்குள்ள தங்கள் நாட்டினரை பத்திரமாக வெளியேற்றி சொந்த நாட்டுக்கு அழைத்து வரும் பணியை இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் மேற்கொண்டு வந்தன. அந்த வகையில் கடந்த 25-ந் தேதி ஆப்கானிஸ்தான் சீக்கியர்கள், இந்துக்கள் மற்றும் இந்தியர்கள் 20 பேர் காபூல் விமான நிலையத்தை வந்து அடைய முடியாமல் போய் விட்டது.
இதனால் 180 பேரை ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றி நாடு கொண்டு வர இந்தியா திட்டமிட்டிருந்தாலும்கூட, 35 பேரை மட்டுமே சி-17 வகை விமானப்படை விமானம் மூலம் மீட்டுக்கொண்டு வர முடிந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு காபூல் விமான நிலையத்தில் ஐ.எஸ். கோரசான் பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல்கள் நடத்தியதால் மீட்பு பணிகள் பாதித்தன.
இந்த நிலையில் மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ளவர்களை வெளியேற்றி கொண்டு வருவதில் இந்தியா கவனம் செலுத்துகிறது. அங்குள்ள நிலைமையை நாங்கள் தொடர்ந்து கவனத்துடன் கண்காணித்து வருகிறோம். இது வளர்ந்து வரும் சூழ்நிலை ஆகும்.
ஆப்கானிஸ்தானில் தலீபான்களை இந்தியா அங்கீகரிக்குமா என்று கேட்கிறீர்கள். தற்போது அங்கு நிலைமை தெளிவாக இல்லை. அரசு அமைப்பதில் தெளிவில்லை. கள நிலவரம், நிச்சயமற்றதாக உள்ளது. முக்கிய கவலை, மக்கள் பத்திரமாக இருக்க வேண்டும், பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதுதான்.
ஆப்கானிஸ்தானில் உள்ளவர்களை மீட்க விமானங்களை இயக்குவது பற்றி இந்தியா பல்வேறு தரப்பினருடன் தொடர்பு கொண்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.