
காபூல்: ஆப்கானிஸ்தானில் ஐக்கிய நாடுகள் சபை ஊழியர்களைத் தலிபான்கள் தாக்கிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில் தெரிவித்துள்ளதாவது: காபூல் விமான நிலையத்துக்குத் தப்பி செல்ல இருந்த ஐ.நா., சபையின் ஊழியரை தலிபான்கள் விரட்டி சென்று தாக்கினர். மேலும், காபூலில் இருந்த மற்றொரு ஊழியரும் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார். அங்கிருக்கும் ஊழியர்களுக்கு தலிபான்கள் மிரட்டல் விடுத்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தை ஐக்கிய நாடுகள் சபையும் உறுதி செய்துள்ளது. இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “இந்த விவகாரம் தொடர்பாக நாங்கள் விசாரணை செய்து வருகிறோம். காபூலில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளவர்கள் தான் அங்குள்ள அதிகாரிகளின் பாதுகாப்புக்குப் பொறுப்பு,” என்று தெரிவித்தார். எனினும், தலிபான்கள் இந்தத் தாக்குதலுக்கு இதுவரை விளக்கம் ஏதும் தரவில்லை.
ஆப்கனில் அதிகாரத்தை கைப்பற்றியுள்ள தலிபான்கள் ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் ஆகஸ்ட் 31ம் தேதிக்குப் பின்னரும் கூட ஆப்கானிஸ்தானில் இருந்து மக்கள் வெளியேறலாம் என தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2831026