
புதுடில்லி : ஆப்கனில் இருந்து புனித ‘குரு கிரந்தம்’ மத நுாலின் மூன்று பிரதிகளுடன் சீக்கியர்கள் 44 பேர் உட்பட 122 பேர் இன்று (ஆக. 24) டில்லி வந்தனர்.
மத்திய அரசு ‘தேவி சக்தி’ என்ற திட்டத்தின் கீழ் ஆப்கனில் சிக்கியுள்ள இந்தியர்கள் உள்ளிட்டோரை பத்திரமாக இந்தியாவுக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இந்த பணியில் அமெரிக்காவில் உள்ள சோப்தி அறக்கட்டளை இணைந்து மத்திய அரசின் வழிகாட்டுதலுடன் ஆப்கனைச் சேர்ந்த சீக்கியர்களை இந்தியாவுக்கு அழைத்து வர உதவி வருகிறது. இந்நிலையில் ஆப்கனில் வசித்த சீக்கியர்கள் 44 பேர் உட்பட 122 பேர் காபூலில் இருந்து தஜிகிஸ்தான் வழியாக சிறப்பு விமானத்தில் இன்று (ஆக. 24) டில்லி வந்தனர்.
அவர்களை டில்லி விமான நிலையத்தில் மத்திய அமைச்சர்கள் ஹர்திப் சிங் பூரி, முரளிதரன் ஆகியோர் வரவேற்றனர். அப்போது சீக்கியர்கள் ஆப்கனில் இருந்து எடுத்து வந்த ‘குருகிரந்தம்’ எனப்படும் சீக்கிய மத நுாலின் மூன்று பிரதிகளை அமைச்சர்களிடம் வழங்கினர்.இதையடுத்து குருகிரந்தப் பிரதிகள் டில்லியில் உள்ள குரு அர்ஜுன் தேவ்ஜி குருத்வாராவுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2829748