
காபூல்: ஆப்கனிஸ்தானில் ஐ.எஸ்.பயங்கரவாத முகாம் மீது அமெரிக்கா ட்ரோன் மூலம் இன்று தாக்குதலை நடத்தியது. இதில் ஏற்பட்ட சேத விவரம் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.
ஆப்கானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். இதனை தொடர்ந்து வெளிநாட்டவர்களை காப்பாற்றும் விதமாக அமெரிக்க படையினர் காபூல் விமான நிலையத்தை தங்கள் கட்டுக்குள் வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காபூல் விமான நிலையத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தியில் 100 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அமெரிக்க படை வீரர்கள் 14 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் அமெரிக்காவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் அமெரிக்க அதிபர் ஆற்றிய உரையில் பயங்கரவாதிகளுக்கு அமெரிக்க ராணுவம் தக்க பதிலடி கொடுக்கும் என தெரிவித்தார்.

இந்நிலையில் கிழக்கு ஆப்கன் பகுதியில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாத முகாம்கள் குறி வைத்து அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. பயங்கரவாத தளபதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காபூல் விமான நிலையம் அருகே யாரும் வர வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2832332