
இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டு திரும்பினால், அடுத்த 3 ஆண்டு காலத்திற்கு பயண தடை விதிக்கப்படும் என சவுதி அரேபியா அரசு அறிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தலால் பல நாடுகள் தங்களுடைய சர்வதேச விமான சேவைக்கு தற்காலிக தடை விதித்துள்ளன.
சரக்கு விமானம் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கான விமான போக்குவரத்து தவிர பயணிகள் விமானங்களுக்கு பல கட்டுப்பாடுகளை கடுமையாக விதித்துள்ளன.
அவற்றில் கொரோனா பாதிப்புகள் அதிகளவில் காணப்படும் நாடுகளில் இருந்து வருவோர், கொரோனா தடுப்பூசி செலுத்திய விவரம், கொரோனா பாதிப்பில்லா சான்றிதழ் ஆகியவற்றை உடன் கொண்டு வருவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சவுதி அரேபிய அரசு கொரோனா பாதிப்புகள் அதிகளவிலுள்ள நாடுகளை ரெட் லிஸ்ட் எனப்படும் பட்டியலில் வகைப்படுத்தி உள்ளது.
அவற்றில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பிரேசில், ஐக்கிய அமீரகம், எகிப்து உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்றுள்ளன.
இதனால், ரெட் லிஸ்ட் பட்டியலில் உள்ள நாடுகளுக்கு தங்கள் நாட்டு குடிமக்கள் பயணம் மேற்கொள்ள சவுதி அரேபிய அரசு தடை விதித்துள்ளது.
இந்த தடையை மீறி பயணம் மேற்கொண்டால் அவர்களுக்கு 3 ஆண்டு காலம் பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, மக்கள் யாரேனும் இந்த நாடுகளுக்கு சென்று திரும்பி இருப்பது தெரியவந்தால் அவர்களுக்கு அதிக அளவிலான அபராதமும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: https://news.lankasri.com/article/saudia-arabia-travel-ban-citizens-red-list-india-1627455684