
புதுடில்லி-‘கொரோனாவால் ஒரு லட்சம் குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிப்பது இதயத்தை பிழிவதாக உள்ளது. இந்தக் குழந்தைகளின் எதிர்காலத்துக்கான திட்டங்களை மத்திய – மாநில அரசுகள் செயல்படுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது’ என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
வழக்கு பதிவுகொரோனாவால் பெற்றோர் இருவரை அல்லது ஒருவரை இழந்த குழந்தைகளின் நலன் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தானாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணையின்போது நீதிபதிகள் எல். நாகேஸ்வர ராவ், அனிருத்தா போஸ் அடங்கிய அமர்வு கூறியுள்ளதாவது:நாடு முழுதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் கொரோனாவால் பெற்றோரில் இருவரை அல்லது ஒருவரை இழந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இதில் 8,161 குழந்தைகள் தாய், தந்தை என இருவரையும் இழந்துள்ளன. அதே நேரத்தில் 92 ஆயிரத்து 475 குழந்தைகள் பெற்றோரில் ஒருவரை இழந்துள்ளன. இதைத் தவிர 396 குழந்தைகள் பெற்றோரால் கைவிடப்பட்டுள்ளன.பெற்றோரை இழந்த குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது; இதயத்தை பிழிவதாக உள்ளது. இது போன்ற குழந்தைகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய மத்திய – மாநில அரசுகள் பல திட்டங்களை அறிவித்துள்ளன.

முன்னேற்றம்
இதில் திருப்திகரமான முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி உள்ளிட்ட வசதிகள் கிடைப்பதை மத்திய – மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2833928